Friday, August 30, 2013

குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்ட...



ஒரு சமுதாயத்தின் நாகரீக வளர்ச்சியையும், மேன்மையையும் அது குழந்தைகளை எந்த நிலைமையில் வைத்திருக்கின்றது என்பதைக் கொண்டு தீர்மானிக்கலாம்.
இந்தியர்களாகிய நாம், நம் கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றுப் பெருமைகள் குறித்து எவ்வளவோ மார்தட்டிக் கொண்டாலும், இந்த நாட்டில் தான் சுமார் 8 கோடிக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பாதுகாத்து வளர்த்தெடுக்காமல் - குழந்தைத் தொழிலாளர்களாக வைத்துள்ளோம். இது நம் அனைவரையும் குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தக்கூடிய தகவலாகும்!
தற்போது மதுரையைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம், “சுமார் 50,000 குழந்தை தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து வட இந்திய மாநிலங்களுக்குச் சென்று கொத்தடிமைகளாகவோ, அல்லது கடினவேலைகளிலோ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்எனத் தெரிவித்துள்ளது.
இது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதும், அந்த சில நிமிஷங்களுக்கு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்திச்செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் வெளியான மற்றொரு தகவல் இந்தியத் தலைநகர் டில்லியில் தினசரி, சராசரியாக 14 சிறுவர்கள் காணாமல் போவதாக அதிர வைத்தது.

குழந்தைகள் என்பவர்கள் அவசியமாக, பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை பாதுகாக்க வேண்டியது ஒரு சமூகத்தின் அடிப்படைக் கடமை! அந்த தலையாய கடமை, நம் தலைநகர் டெல்லியிலேயே தடம்புரள்கிறது என்றால், நாம் வாழ்வது ஒரு தற்குறி சமுகத்திலா..? என்ற கேள்வி மனதில் எழுகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு அடிப்படைக் காரணங்கள் வறுமை, பொறுப்பின்மை, பெற்றோர்களின் குடிப்பழக்கம், குறைந்த கூலிக்கு கேள்விவரையில்லாமல் உழைப்புசக்தியை திருடும் வக்கிரமான பேராசை புத்தி ... போன்றவையாகும்.

இந்த சமூகத்தை நிரந்தர வறுமையிலும், அறியாமையிலும் ஆழ்த்திவைப்பது நம்மை தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் அறிவிக்கப்படாத கொள்கை பிரகடனமாக உள்ள ஒரு சூழலில், தனிநபர் மனமாற்றம் என்ற தற்காப்பு நடவடிக்கை ஒன்றே, நம் ஒவ்வொருவரின் உடனடிக் கடமையாகும்!

ஏனென்றால் 1979-ல் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு அமைக்கப்பட்ட குருபாதசாமி கமிட்டி தொடங்கி போடப்பட்ட கமிட்டிகள், சட்டங்கள், திட்டங்கள், செலவுசெய்த தொகைகள்... கொஞ்ச நஞ்சமல்ல. விளைவு? - ஆண்டுக்காண்டு குழந்தைதொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததே கண்ட பலனாயிற்று!
அதுவும் பாதுகாப்பானத் தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதையாவது உத்திரவாதப் படுத்த முடிந்திருக்கிறதா என்றால், அதுவுமில்லை. பல ஆபத்தான தொழில்களில், கொடூரமான வழிமுறைகளில் அந்த இளம் சமூகம் வஞ்சிக்கப்படுவதும், கொலைகளுக்காளாவதும், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. சமீபத்தில், மதுரைக்கருகே ஐந்து வயது தலித் சிறுமி, கொலை செய்யப்பட்டு அவளது இளரத்தம், கட்டிடம் கட்ட காணிக்கையாக்கப்பட்ட செய்தி நம்மை கலங்கடித்தது.

தான் எதற்காக பிறந்துள்ளோம் என்பதையே அறியாமல், தற்குறியாக வளர்ந்து ஆளாகி, தானும் சில குழந்தைகளை ஈன்றெடுத்து பன்றிக்குட்டிகள் போல், வீதிகளில் திரியவிடும் பாமரச் சமூகத்தை காலங்காலமாக கண்டு வருவதே நம் பாரததேசம்! அதே சமயம் தர்மமும், தயை நிறைந்த ஈகைத்திறமும் தழைத்தோங்கிய தேசமும் இதுதான்!
அதனால், வசதிபடைத்த ஒவ்வொருவரும், வசதியற்ற ஒரு குழந்தையின் படிப்புக்கோ, உணவுக்கோ முடிந்த அளவிலோ அல்லது முழுமையாகவோ பொறுப்பேற்க முன்வருவது, நம் முன்புள்ள அத்தியாவசியக் கடமையாகிறது.

குழந்தைகளைக் கொண்டாடுவோம்!
குழந்தைகளிடமிருந்து நாம் தொலைத்து நிற்கும் மனிதநேயத்தை, நற்குணங்களை கண்டடைந்து, நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்வோம்!

2.5.2012

No comments: