Friday, August 30, 2013

அசாஞ்சே; உலக ஊடக நாயகன்



புலனாய்வு ஊடகச் செயல்பாடுகளில் உலகையே  அதிரவைத்த செய்திகளை அம்பலப்படுத்தியவர் வீக்கிலீக்ஸின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே!

இந்த காரணங்களுக்காகவே இப்போது அவர் உலக வல்லரசு நாடுகளால் வேட்டையாடப்படுகிறார். கடந்த இரண்டாண்டுகளாக இலண்டனில் தஞ்சமடைந்திருந்த அசாஞ்சேவை, தற்போது ஸ்வீடன் அரசு கேட்டதற்கிணங்க நாடு கடத்திவிடும்படி இலண்டன் சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டுள்ளது. இந்த செய்தி உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களை மட்டுமின்றி, சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.!

சுமார் 200 ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கொண்ட உலக ஊடக வரலாற்றில் அசாஞ்சே அளவுக்கு பெரும் அதிர்வலைகளை, உலகநாடுகள் ஒவ்வொன்றிலும் ஏற்படுத்தியவர் என்று சொல்ல வேறொருவரில்லை!

 2006 தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் உலகின் அதிகாரமையங்களை அதிரவைத்து, கலக்கத்தில் ஆழ்த்திய மாபெரும் ஊடகப்புயலாக அசாஞ்சே உருவெடுத்தார். எனவே தான் உலகின் மிகப் பிரபலமான அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ்இலண்டனிலிருந்து வெளிவரும் தி கார்டியன்உள்ளிட்ட ஐந்து உலகப் பெரும் ஊடகங்கள் அவரது விக்கிலீக்ஸ் அச்சு ஊடக பாகஸ்தர்களாயினர்.

ஆரம்பகாலங்களில் அசாஞ்சே, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் ஊழல்களை, அரசியல் அதிகாரமையங்களின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியபோது அதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அதிகார மையங்கள் ஆர்வத்தோடு கவனித்தன.
2008-ல் அசாஞ்சே கென்ய அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை தோலுரித்தபோது அம்னெஸ்டிக் இண்டர்நேஷனல்அமைப்பு அவரை விருது வழங்கி கௌரவித்தது.

சீனா, பாகிஸ்தான், சௌதி அரேபியா ஆகிய நாட்டு அரசுகளால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல் அநியாயங்களை அசாஞ்சே அம்பலப்படுத்தியபோது, உலகமே அதை பதற்றத்தோடு பார்த்தது!

இந்திய அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளை அசாஞ்சே துல்லியமாக அம்பலப்படுத்தியபோது இந்தியா ஏழைகளை சுரண்டிவாழக்கூடிய பெரும் பணக்காரர்கள்  ஆளும் நாடு என்பதை அகிலத்திற்கே உணர்த்தியது.

இதையெல்லாம் விட, அசாஞ்சே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ராணுவ அத்துமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் பதிவு செய்ததும், உலக நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்நாட்டு அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் குறித்து உளவுபார்த்து தன் நாட்டிற்கு அனுப்பிய  தகவல்களை அம்பலமாக்கிய போதும் தான், அவர் உலகப்பெரும் வல்லரசுகளின் பெரும் எதிரியாகிப் போனார்.

 இந்தப் பதிவுகளில் மூன்றாம் உலக நாடுகளில் தனது வல்லாதிக்கத்தை நிகழ்த்த, அமெரிக்கா நிகழ்த்தும் அத்துமீறல்கள், சர்வாதிகார ஊழல்.. தலைமைகளை ஊக்குவிப்பது, தனக்கு ஒத்துவராவிட்டால் எவ்வளவு நல்ல அரசாயினும் ஆட்டுவிப்பது போன்றவை அம்பலப்பட்டன.
இதனால் தான், அமெரிக்காவிலும், இலண்டனிலும் உள்ள அரசியல்வாதிகள் அசாஞ்சேவை, ‘கொல்லவேண்டும்என்ற அளவுக்கு வெளிப்படையாகப் பேசுகின்றனர்.

இந்தச் சூழலில் தான் சட்டரீதியான பாதுகாப்பும் தற்போது அவருக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. எனினும் அசாஞ்சே மேல்முறையிடு செய்ய உள்ளார். உலக மக்கள் குறிப்பாக ஊடக, சமூக, அரசியல் தளங்களில் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் கோடிக்கணக்கான ஆர்வலர்கள் அசாஞ்சேவின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர்.

ஒரு மாபெரும் வீரனை, மிக மலிவான பாலியல் சூழ்ச்சியில் கைது செய்து முடக்க பார்க்கும் உலக வல்லரசு நாடுகளின் எண்ணம் தோற்பது திண்ணம். ஏனெனில் மறைக்கப்படும் உண்மைகளின் வாயிலாக கட்டமைக்கப்பட்ட மாயைகள் கலகலத்து உதிர்வதை, மக்கள் இன்னும், இன்னும் எதிர்பார்க்கிறார்கள். தவறு செய்பவர்கள் திருந்தட்டுமே!

No comments: