Friday, August 30, 2013

கட்சிகளுக்கு நிதி, தேர்தல் ஜனநாயக சதி



எஸ்.ஓய்.குரேஷி விடைபெற்றுவிட்டார்.
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக சம்பத் பொறுப்பேற்றுள்ளார். நேர்மையாகவும், சிறப்பாகவும் தன் எல்லைகளுக்குட்பட்டு செயல்பட்டவர் குரேஷி. விடைபெறும் தருவாயில் அவர் கூறிய சில விஷயங்கள் ஆழ்ந்த பரிசீலனைக்குரியவை.

தேர்தலின் போது பணபலத்தை தடுக்கமுடியவில்லை இது பெரும் சவால்!
பணத்திற்காக செய்தி வெளியிடும் ஊடகங்களின் போக்கு நேர்மையான தேர்தலுக்கு ஒரு நவீன அச்சுறுத்தல்!
ஓட்டுப்போடாத வாக்காளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை!
ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறுவது சாத்தியமில்லை.

இந்த கருத்துக்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் பண பலம். இந்தியாவில் தேர்தல் என்பது 1919 முதல் அறிமுகமானது. அன்று தொடங்கி பணபலம் தேர்தலில் பிரயோகிப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. தற்போது இது மிகவும் அதிகரித்துள்ளது. அதுவும் நீதி, தர்மம், நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய ஆட்சி அதிகார மையத்தில் இருப்பவர்களே அடாவடியாக இன்றைய தினம் பணபலத்தை பிரயோகிக்கிறார்கள்.

ஒரு வகையில் தேர்தல் அரசியல் ஒரு ஜனநாயக மீட்டெடுப்பு என்பது ஒரு பக்க உண்மையென்றால், பற்பல ஜனநாயசீர்குலைவிற்கும் தேர்தல் அரசியலே வித்திடுகிறது என்ற உண்மையை நாம் புறந்தள்ள முடியாது.
தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் தலைமைகளும், வேட்பாளர்களும் பெறக்கூடிய வெளிப்படையில்லாத நன்கொடைகள் பல எதிர்காலத் தீமைகளுக்கு வித்திடுகின்றது.

இதை தடுக்கும் சக்தி அல்லது அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்கிற நிலைமையில், தேர்தலில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தை தொடக்க நிலையிலேயே தடுக்க முடியாத சமூக அரசியல் சூழலை எவ்வாறு மாற்றப் போகிறோம் என்பதே நமது தொடக்க புள்ளியாக இருக்க வேண்டும்.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே
என்கிற புகழ்பெற்ற பொன்மொழியின்படி, தேர்தலில் முதலில் பணபலம் யாசகம் பெறும் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் ஆட்டுவித்து, அவர்களின் வழியாக கடைசியாக மக்களையும் ஆட்டுவிக்கிறது.

அடுத்ததாக, இந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்டு நீதி நிலைநாட்டப்பட துணைபுரிய வேண்டிய ஊடகங்களும் இந்த அநீதி நாடகத்தின் ஒரு அங்கமாக மாறிவருவது உண்மையிலே பெரும் கவலையளிப்பதாகும்!
அதோடு எப்போதும் ஓட்டுப்போடப்போவதில்லைஎன்பதாக வாழும் சுமார் 30 முதல் 45 சதவிகிதம் வரையிலான வாக்காளர்கள்! இதில் படித்த மேல் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே கணிசமானவர்கள்! இவர்கள் தங்களின் பொறுப்பற்ற அலட்சியபோக்கால் பெரும் அநீதிகளுக்கு மறைமுகமாக துணைபோகிறார்கள்.

மேற்படி மூன்று விவகாரத்திலும் முக்கியமாக சம்பந்தப்பட்டிருப்பது படித்தவர்கள், அறிவுத்துறையினரே! எனவே இவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டிய குறள் ஒன்றுண்டு.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை?
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதி செயல்படாத ஒருவன், தான் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?
இப்படி பற்பல தரப்பினரும் அவரவர் பங்கிற்கு தேர்தல் ஜனநாயத்தை சீர்குலைத்துவிட்டு எல்லாவற்றையும் தேர்தல் கமிஷன் பார்த்துக்கொள்ளும் என்று ஒற்றை பொறுப்பாக்கிவிட முடியுமா? அது நியாயமா? எனவே தேர்தல் ஜனநாயகத்தை திடப்படுத்துவதற்கு அனைவரின் பங்களிப்புமே அவசியமாகிறது.

சரியான அரசியல்கட்சி, பொறுப்பான வேட்பாளர், கடமை தவறாத வாக்காளர்கள், நேர்மையான ஊடகங்கள்... என எல்லாம் ஒழுங்குபெறும் போது, அங்கே ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கே அவசியமில்லை. அப்படியே ஊழல் மக்கள் பிரதிகள் உருவானாலும் அவர்களை திரும்பப்பெறுவது என்பது நடைமுறை சாத்தியமில்லை. பொறுத்திருந்து தான் தீர்வு காணவேண்டும்.
அந்த நாளும் வந்திடாதோ என்று
ஏக்கத்துடன் காத்திருக்கிறது காந்திதேசம்.

ஜுன்-2012

No comments: