Friday, August 30, 2013

அதிகரிக்கும் கல்விக் கட்டணங்கள்...



மீண்டும் ஒருமுறை கல்விக் கட்டணங்கள் அதிகரிக்கும் வகையில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கண்விழி பிதுங்க வைக்கும் கல்வி கட்டணங்களால் ஏற்கெனவே ஏழை, எளிய, நடுத்தரவர்க்க குடும்பங்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது தனியார் பள்ளி கல்வி வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்தான்! உண்மையில் இந்தக் கல்வி கட்டண உயர்வின் நதிமூலம் அரசியல் தான்! தனியார் பள்ளிகளின் வரம்பு மீறிய கல்வி கட்டண கொள்ளைகளால் கதிகலங்கி கொண்டிருந்த ஏழை எளிய நடுத்தர பிரிவினரின் கோபக்குமுறல்களை, ஆதங்கங்களை ஆதாய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு முந்தைய தி.மு.க அரசு தனியார் பள்ளிகள் கல்வி கட்டண ஒழுங்குமுறை சட்டம் ஒன்றை 2009-ல் கொண்டு வந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து கல்விகட்டணங்களை நிர்ணயித்தது. இந்த அணுகுமுறை படுதோல்வியில் முடிந்தது. பொருளாதார பலம் படைத்த பள்ளி நிர்வாகங்கள் இக்கட்டணத்தை கேள்விகுள்ளாக்கி மீண்டும், மீண்டும் நீதிமன்றங்களை அணுகியதும், நீதிபதி கோவிந்தராஜனே விரக்தியடைந்து கமிட்டியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகியதும், அடுத்தடுத்து கல்வி கட்டணங்கள் இந்த மூன்றாண்டுகளில் முன் எப்போதுமில்லாத அளவிற்கு தனியார் பள்ளிகளால் உயர்த்தப்பட்டதும், அதை அடுத்து அமைந்த நீதிபதி ரவிராஜன் கமிட்டிஅவற்றை அங்கீகரித்ததும் நாடறிந்த உண்மைகள். மொத்தமுள்ள 11,000 பள்ளிகளில் மேல்முறையீடு செய்த 6,000க்கு மேற்பட்ட பள்ளிகள் சுமார் 100% வரை கட்டண உயர்வை பெற்று திருப்தி அடைந்தபோதிலும் 318 பள்ளிகள், அதிலும் திருப்தி அடையாமல் நீதிமன்றம் சென்று தற்போது கூடுதலாக மேலும் 15% கட்டண உயர்வை வசூலிக்க வாய்ப்பு பெற்றுவிட்டன!

அப்படி ஒரு சட்டமும், அடுத்தடுத்து கமிட்டிகளும் இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு மோசமான கல்விகட்டண உயர்வை நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை என்றே பெரும்பாலான பெற்றோர்கள் குமுறுகிறார்கள்!

காரணம் என்ன?
இந்த சட்டத்தினால் கல்வித்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நிர்பந்தங்கள் எங்களுக்கு உருவாயிற்று. அரசாங்கம், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்என கொண்டுவந்த சட்டம் தனியார் பள்ளி நிர்வாகங்களை ஒன்றுபட வைத்தது. ஒற்றுமையும், தொடர் போராட்ட முயற்சிகளும் தந்த தைரியங்களால் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு விட்டது. இதுதான் தனியார் பள்ளி நிர்வாகத் தரப்பினரின் விளக்கம்!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணங்களை ஒரு வரைமுறைக்கு கொண்டு வர அரசு உளப்பூர்வமாக நினைத்திருந்தால் அதை மிகுந்த பொறுப்புணர்வுடன் கையாண்டிருக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகங்களை மதித்து, அரவணைத்து அதே சமயம் அரசின் அதிகாரபலத்தையும் சூசகமாக உணர்த்தி, ஒரு மாரல் கிரவுண்டில்அவர்களையும் உள்ளடக்கிய அரசு கமிட்டி அமைத்து ஒரு இணக்கமான தீர்வுக்குத்தான் வந்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது?
கல்வி அமைச்சரும், முதலமைச்சரும் பொதுமக்களிடம், ‘சபாஷ்பெற்றுக்கொள்ளும் நோக்கில், ‘எச்சரிக்கை’, ‘ஜாக்கிரதை’, ‘இனி நடக்காதுஎன்று தனியார் பள்ளிகளுக்கு அறிக்கை விடுத்தனர். அறிக்கை விடுபவர்கள் எப்போதுமே, எதையுமே சாதிப்பதில்லை!
சில தருணங்களில் சட்டங்களைக் காட்டிலும் சாதுரியமே பலன்தரும்!
அதிகார பலத்தை அகத்தூய்மையோடு, பொதுநலன் சார்ந்து பிரயோகிக்கும் போது நிச்சயம் பலன் தரும்!

எந்த ஒரு வியாபாரத்திற்கும் சில நெறிமுறைகளும், தர்ம நியாங்களும் அவசியமானவையாகும்! ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இவை இல்லாமல் இருப்பது தான் பிரச்சினை! வரம்புமீறிய கல்விக் கட்டணங்கள், நிர்பந்த நன்கொடைகள், கல்வியல்லாத பிற சீருடை, பஸ்கட்டணம், புத்தகம், நோட்டு... என இத்யாதி வகைகளில் பிடுங்கும் வசூல்கள்... போன்றவை வியாபாரத்தைக் கடந்த சூரையாடல்களாகவே பெற்றோர்களால் கருதப்படுகின்றன!

தனியார் பள்ளிகளுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான்!
கொஞ்சம் உங்கள் மனசாட்சிக்கு மதிப்பளியுங்கள்
மனசாட்சியோடு செயல்படும் பள்ளி நிர்வாகங்கள்
மக்களின் மரியாதைக்கு உரியவையாகும் என்பதே உண்மை!

11.6.2012

No comments: