Friday, August 30, 2013

மே தின சபதம்



மே தினம் என்பது சர்வதேச தொழிலாளர் தினமாக உலக அளவில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 1886-ல் சிகாகோ மாநகரில் நேர நிர்ணயமில்லாமல் தங்கள் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருந்த ஆலை முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் வீதியில் திரண்டு நடத்திய போராட்டம் துப்பாக்கி சூடு, கலவரம், உயிர்பலி, ரத்தச்சிதறல் என்பதாக எதிர்கொள்ளப்பட்டது. எனினும் அந்த போராட்டத்தின் விளைவே தொழிலாளவர்கத்தினருக்கு எட்டுமணிநேர  வேலை நேரத்தை உறுதிபடுத்தியது.

அதன்பிறகு 1891-தொடங்கி இந்த நாள் உலகத்தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இன்று இந்நாள் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, மலேசியா, சிங்கப்பூர்.. போன்ற 80 நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மே தினத்தை தொழிலாளர்களின் போர்குணத்தை தூண்டிவிடும் தினமாக தொழிற்சங்கத் தலைவர்கள் கருதி ஊர்வலம், பொதுக்கூட்டம், விழா போன்றவற்றை நடத்துகின்றனர்.

அரசியல் தலைவர்கள் அனைவருமே தொழிலாளர்களிடையே தங்கள் கட்சிக்குள்ள ஆதரவு தளத்தை விரிவுபடுத்திக்கொள்ள அறிக்கைகள் தருகின்றனர். நம்மை பொறுத்தவரை இந்நாளை தொழிலாளர் தினமாக மட்டும் பார்க்காமல், உழைப்பு என்பது மனிதகுலம் அனைத்துக்குமே பொதுவானது-அவசியமானது- என்றவகையில் அது குறித்த விழிப்புணர்வு தினமாக பார்க்கப்படவேண்டும் என எண்ணுகிறோம்!,

உழைப்பே உயர்வு தரும்என்பது அவரவரும் பெற்றுள்ள அனுபவப் படிப்பினையாகும். ஆனால், ‘அந்த உழைப்புக்கு ஒரு வேலை கிடைக்குமா? கிடைத்தாலும் அது உத்திரவாதமாகுமா?’ என்பதே இன்று உலகம் முழுமையும் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் சவாலாகும்!

உலகம் முழுக்க வேலை இல்லா திண்டாட்டம் ஒரு புறமும், இருக்கும் வேலையை இழக்கும் உழைப்பாளர் கூட்டம் மறுபுறமுமாக பல்கி பெருகிக் கொண்டிருக்கிறது. இது ஏன் நடக்கிறது? இதற்கு மாற்று என்ன? இச்சூழலில் என்ன செய்யவேண்டும்?... என வேலையில்லா இளைஞர்களுக்கும், வேலை இழந்த தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு தர வேண்டிய நாளே மேதினமாகும்!

மனிதகுலம் தோன்றிய போது அது வேட்டையாடி உயிர்வாழும் சமுகமாக இருந்தது. காலமாற்றத்தில் நிலத்தில் பயிரிட்டு பலன்பெறும் பட்டறிவை பெற்றபோது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிற்கு மாறியது. பிறகு இரும்பு, உலோகங்கள் கண்டு பிடிக்கப்பட்டபோது தொழிற்சாலைகள் யுகத்திற்கு காலடி வைத்து முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு வந்தது. அதன் பிறகான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப தன்னை மனித இனம் தகவமைத்துக் கொண்டது. அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டின் இறுதிகாலப்பகுதியும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பபகுதியும் பல வேகமான மாற்றங்களை கொண்டதாயுள்ளது. இந்த விறுவிறுப்பான கால சுழற்சிகளில் பல பாரம்பரிய தொழில்கள் இருந்த இடம் தெரியாமல் இல்லாதொழிவதும், பற்பல புதிய தொழில்கள் பூத்துக் குலுங்குவதும் நாம் கண்டுவரும் யதார்த்தம்!

இதில் இலட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கிறார்கள்...
இலட்சக்கணக்கானவர்கள் புதிய வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்.!
காலமாற்றத்தை கண்டுணர்ந்து, தங்களை சுதாரித்துக்கொண்டு, புதிய சூழல்களுக்கு தங்களை தகவமைத்துக் கொள்பவர்கள் தழைத்து வளர்கிறார்கள். சுதாரித்துக் கொள்ளாதவர்கள் சோர்ந்து, சோகத்தைச் சுமந்து பிறரை சபிக்கிறார்கள்.! சந்தையைச் சார்ந்தே தொழில் தீர்மானிக்கப்படுகிறது. பிழைப்பைச் சார்ந்தே உழைப்பும் தீர்மானமாகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இன்றைக்கு அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட தொழிற்கேந்திரங்கள் கிடையாது. அவற்றின் முகமே மாறிநிற்கிறது, முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த கடைவீதிகளின் தோற்றமும் இன்று முற்றாக மாற்றம் கண்டுள்ளன. செல்போன்கள், டிஜிட்டல் பேனர்கள், நவீன தொலைகாட்சிகள், கம்யூட்டர்கள், அலங்கார பொருட்கள்... என நுகர்வுகலாச்சாரமே மாறியுள்ளது. மாற்றத்திற்கேற்ப மனிதகுலம் தன் உழைப்பாற்றலை உருவாக்கிக் கொள்ள வேண்டியதே காலம் நமக்கு கற்றுத்தரும் படிப்பினையாகும்! அரசாங்கம் சிலபேருக்கு வேலைவாய்ப்பை தரலாம்! மற்ற சிலருக்கு தனியார் நிறுவனங்கள் தரலாம். ஆனால்  UN Organised sector  எனப்படும் உதிரிதொழிலாளர்வர்க்கம் என்ற பெருந்திரளோ தனக்கான வேலையை எப்படியோ முட்டிமோதி உருவாக்கி கொண்டு வாழத்தான் செய்கிறது.
எனவே மேநாளில், உழைக்கும் உத்வேகத்தை உயிர்ப்போடு தொடர உறுதி மேற்கொள்வோம். இதை உரிமைக்கான தினமாக 
மாத்திரமில்லாமல், வளர்ச்சிக்கான, இலட்சிய இலக்கை எட்டுவதற்கான நாளாக குறித்து வைத்துக்  கொள்வதே உழைக்கின்ற அனைவருக்குமே பெருமை சேர்க்கும்!

30.4.2012

No comments: