Wednesday, July 3, 2013

மாவோயிஸ்டுகளும், மண்டியிடும் ஒரிசா அரசும்



ஒரு பக்கம் கடத்தப்பட்ட ஆளும்கட்சி எம்.எல். ஜின்னாஹிகாகாவை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு, தங்கள் நிபந்தனைகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட்கள்... இன்னொரு பக்கம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினருக்காகவும், கட்சி எம்.எல். என்ற வகையிலும் அரசு தன் கௌரவத்தையும் நிர்வாக ஆளுமையையும் எந்த அளவுக்கு இழக்க முடியும் என்ற கேள்வி, மறுபுறம் மாநில போலீசார் தரப்பிலிருந்தும், உச்சநீதி மன்றத்தை அணுகியுள்ள ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கங்குர்தீப் பாங்கி தரப்பிலிருந்தும் மாவோயிஸ்ட்களை, நச்சல்களை விடுதலை செய்யக் கூடாது என்ற நிர்பந்தம்!
மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைக்கு பணிந்தால் இது நாள்வரை உயிரை பணயம் வைத்துப் போராடி கைது செய்யப்பட்டுள்ள 29 பேரை விடுதலை செய்யவேண்டும். அந்த 29 முக்கிய நபர்களை இணைத்துக் கொண்டு மேலும் மாவோயிஸ்ட்டுகள் வலிமை பெற்று, அடுத்தடுத்து யாரேனும் முக்கியநபர்களைக் கடத்திவைத்து மீண்டும் நிபந்தனை விதிப்பது என்பது வாடிக்கையாகலாம்! அப்போது அரசின் ஆளுமை தரைமட்டமாகிவிடும், அரசின் செல்வாக்கைவிட மக்களிடம் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு ஒங்கிவிடும்!
நான்கு முறை தங்கள் நிபந்தனை காலகட்டத்தை நீடித்த மாவோயிஸ்ட்கள் தற்போது ஏப்ரல் 25-ல் மக்கள் மன்றத்தில் எம்.எல்.ஏவை நிறுத்தி தீர்ப்பு வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே ஐந்து மாவோயிஸ்ட்களை விடுவித்து 13பேர் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்தும் திருப்தி அடையாத மாவோயிஸ்ட்கள் 25ந் தேதி மக்கள் மன்றத்தில் எம்.எல் ஏவை நிறுத்தி ஏவ்வித விசாரணைகளுக்கு அவரை ஆட்படுத்த போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இது நாள்வரை அந்த எம்.எல். அங்குள்ள ஆதிவாசி மக்களிடம் வைத்திருந்த உறவும், நடவடிக்கைகளுமே அவரது விதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே அரசாங்கம் இனி அவசரப்படாமல் நிதானமாக, உறுதியோடு தன் நிலைபாட்டில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் இனி மேன்மேலும் மாவோயிஸ்ட்களின் நிபந்தனைக்கு அரசாங்கம் அடிபணிவதை உச்சநீதி மன்றம் தடை செய்யவாய்ப்புள்ளது. காரணம் மாவோயிஸ்ட்களின் தொடர்ச்சியான விடுதலையானது மாநிலத்தில் சட்டம் ஒழங்கிற்கு பெரும் சவாலாக உருவெடுக்க வாய்ப்புண்டு, எனவே மாவோயிஸ்ட்களின் மக்கள் மன்றமும், நமது உச்சநீதிமன்றமும் இதில் தரப்போகும் தீர்ப்புகளிலிருந்து மாநில அரசு பெறவேண்டிய படிப்பினைகள் பல உள்ளன.
முதலாவதாக, கடந்தகால தவறுகளே நிகழ்கால விளைவுகள் என்பதை ஒடிசா அரசு உணரவேண்டும்!
இந்திய வரலாற்றில் ஒடிசா பிராந்தியத்திற்க்கென்று ஓப்பற்ற முக்கியத்துவம் சில உள்ளன.
இந்த பூமியில் தான் ஆசியா கண்டமுழுமையும் புத்தமதத்தை பரப்பிய அசோக சக்கரவர்த்தியின் அஹிம்சை அரசாங்கம் நிலைகொண்டிருந்தது. அச்சமூட்டிய சம்பல் கொள்ள கொள்ளையர்கள் ஒரு காலத்தில் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து காந்தீயவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் சரணடைந்தனர். இப்படியாக மிகப்பெரிய அஹிம்சை ஆளுமைகளைக் கொண்ட இந்நாட்டில் இன்று மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் வளர்ந்தது எவ்வாறு? ஏன் இந்த நிலைமைதன் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடு மலைகளை உள்ளடக்கிய ஒரிசாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவிகிதத்தினர் ஆதிவாசிகள் என்பதும், இவர்கள் தொடர்ந்து காலகாலமாக அலட்சியப்படுத்தப்பட்டு வறுமையின் பிடியில் உழன்றார்கள் என்பதும் நிதர்சனம். இந்தியாவில் இரு தளங்களில் தான் தீவிரவாதம் செழிந்தோங்கியுள்ளது! ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சிகள் காலூன்றிய இடம்! மற்றொன்று கார்ப்பரேட் கம்பெனிகள் காலூன்றிய இடம்! இதில் இரண்டாவது நிலைமையைத் தான் ஒடிசா அனுபவித்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கிரிவளத்தையும், இரும்பையும், இது போன்ற தாது பொருட்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.
ஒரிசா மலைப்பகுதிகாடுகளை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் ஆக்கிரமித்து கால்பதித்ததிலிருந்து தான்ஆதிவாசி மக்கள் மாவோயிஸ்ட்டுகளின் பின்னால் நிற்க ஆரம்பித்தது. சுதேசியமும், சுயச்சார்பும் சுதந்திர இந்தியாவில் மீட்டெடுக்கப்பட்டால் மாவோயிஸ்ட்டுகளும் வன்முறை பாதையிலிருந்து விடுபட்டு தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பு கைகூடும். மாவோயிஸ்ட்களின் பிடியிலிருந்து மக்கள் விடுதலை பெறுவது தானாக நிகழ்ந்தேறும்!
ஏப்ரல் - 2012

No comments: