Wednesday, July 3, 2013

ஆதரிப்போம் அப்துல்கலாமை!



நமது நாட்டின் மிக உயர்ந்த பதவி குடியரசுத் தலைவர் பதவி. இது அதிகாரமற்ற பதவிபோல் தோற்றமளிக்கக் கூடிய அதிகாரமான பதவியாகும். பதவி என்பது எத்தகையதாக இருந்தாலும் அதில் அமரக்கூடியவர்களின் தன்மையைப் பொறுத்து அதன் அந்தஸ்த்தும், மரியாதையும் கூடுவதுமுண்டு, குறைவதுமுண்டு!
அந்தவகையில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற மூதறிஞர் ராஜாஜியால் அப்பதவிக்கு அந்தஸ்த்து கூடியது. அடுத்ததாக ராஜாஜியின் ஆசியும், ஆதரவும் பெற்று பதவி ஏற்ற டாக்டர். ராஜேந்திரபிரசாத் ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு கடிவாளமாக இருந்தார். ஆனபோதிலும் அவர் 12 ஆண்டுகாலம் குடியரசுத் தலைவராகத் தொடர்ந்தார். அதற்கடுத்ததாக வந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கல்வியாளர், தத்துவஞானி என்று மதிக்கப்பட்டார். அந்தவரிசையில் கே.ஆர். நாராயணன் அவர்களும், அப்துல்கலாம் அவர்களும் நேர்மைக்கும், வெளிப்படைத் தன்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தனர். அதே சமயம் இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி தற்போது பதவியிலிருந்து ஒய்வு பெற்றுச் செல்லும் வரையிலும் சர்ச்சைக்குரியவராக இருந்து கொண்டிருக்கிறார் பிரதிபாபட்டீல்!
ஒரு ஆட்சித் தலைமை எப்படிப்பட்டவரை ஜனாபதியாக முன்மொழிகிறது என்பதைக் கொண்டு அத் தலைமையின் யோக்கியதையை நாம் அறியலாம்.
தனக்கேற்ற ஒரு தலையாட்டி பொம்மையை ஜனாதிபதியாக்க இந்திராகாந்தி வி.வி.கிரியை முன்மொழிய, காங்கிரஸின் முதுபெரும் தலைவர்களான காமராஜ் போன்றோர் சஞ்சீவரெட்டியை முன்மொழிய காங்கிரஸ் பேரியக்கமே இரண்டாகப் பிளந்தது.
எனவே ஜனாபதியாக வருபவர் தங்கள் ஆட்சியின் அவலங்களைக் கண்டுகொள்ளாமல், அநீதிகளுக்கு துணைபுரிய வேண்டும் என்று கருதினால் அதற்கேற்ற ஒருவரையே ஒரு ஆளும் தரப்பு ஆதரிக்கும். அந்தவகையில் தான் சென்றமுறை ஜனாதிபதி தேர்தலுக்கு சர்ச்சைக்குரிய பிரதிபாபட்டீல் காங்கிரஸால் முன்நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார். பதவி ஏற்றதும் சம்பளத்தை மூன்று மடங்காக்கிக் கொண்டது, ஆடம்பரமான வெளிநாட்டுப் பயணங்கள், உறவினர்களின் அத்துமீறல்கள், மரணதண்டனைக் கைதிகளின் கருணை மனுமீது பொறுப்பற்ற அணுகுமுறை எனத் தொடர்ந்த பிரதிபா பட்டீல் மீதான புகார்கள் தற்போது அவர் ஒய்வு பெறுவதற்கு உருவாக்கப்படும் மிகப் பிரம்மாண்டமான நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் மாளிகை வரை வந்துள்ளது.
எனவே அடுத்து வரக்கூடிய ஜனாதிபதியாவது அப்பழுக்கற்றவராக வரவேண்டும் என்பதே அனைத்து மக்களின் ஏக்கமாகவும், விருப்பமாகவும் உள்ளது.
இதனை தற்போதுள்ள ஆளும் மத்திய ஆட்சித்தலைமை உணரவேண்டும். ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக திறமையின்மை, தேர்தல் தோல்விகள்... என களங்கப்பட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்வு வேட்பாளர் மூலம் மேலும் கறைபட்டுவிடலாகாது. அதற்கு இன்றைய தினம் அனைத்துமக்கள் மற்றும் அனைத்துகட்சியினரும் ஆட்சேபணை சொல்ல முடியாத ஒரு ஜனாதிபதி வேட்பாளர் அப்துல்கலாமைத் தவிர வேறொருவர் இல்லை.
மக்களை நேசிப்பவர், மாணவர்களிடம் அக்கறை கொண்டவர், சுயநலமில்லாதவர், அறிவியல் அறிஞர், உலகில் உள்ள 30க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களால் கௌரவடாக்டர் பட்டம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டவர். இந்திய அரசால் பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரதரத்னா போன்ற உயர் விருதுகள் தந்து போற்றப்பட்டவர். எல்லாவற்றுக்கும் சிகரமாக எளிமையானவர் என்ற பெருமைகளைக் கொண்ட டாக்டர். அப்துல்கலாமை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் தன்னை கௌரவப்படுத்திக் கொள்ளட்டுமே!

23.4.2012

No comments: