Wednesday, July 3, 2013

டெங்கு காய்ச்சல் - அரசின் அலட்சியம்



பகை நாட்டுப் படையினர் வந்து மக்களை தாக்கி செல்வங்களை அள்ளிச் செல்வதைப் போல,
எங்கிருந்தோ வந்த ஏடிசு வகை கொசுக்கள் தென் தமிழக மாவட்ட மக்களைத் தாக்கி அவர்களின் உடல் ஆரோக்கியம் என்ற விலைமதிப்பில்லா செல்வத்தை சூறையாடி செல்கின்றன...!
கடந்த இரண்டு மாதங்களாக தென் தமிழகமே கதிகலங்கிக் கிடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆஸ்பிட்டல்களில் அடைக்கலம் தேடிய அவலங்கள் நடந்தேறின.
தற்போதும் பரவலாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை சுமார் 30 பேர் இறந்துள்ளனர் என்று அரசு தரப்பிலும், 37பேர் இறந்துள்ளதாக ஊடகங்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்து முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த இரு நாட்களாக தென் மாவட்டங்களில் போர்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு முயற்சிகள் ,சுமார் 1330 தற்கால புதிய சுகாதாரப்பணியாளர்களைக் கொண்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் 2 நாட்கள் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று அரசின் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.
அரசின் தற்போதைய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை தான்!
ஆனால் இந்த நடவடிக்கைகள் சற்று முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், சம்மந்தப்பட்ட கொசுக்கள் மேன்மேலும் பரவாமல் தடுப்பது ஒன்றே மக்களை காப்பாற்றும் ஒரே வழி என்பதால் ஜனவரி மாத தொடக்கத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆரம்பமான கால கட்டத்திலேயே அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும்!
அதுவும் 2009 ஆம் ஆண்டு இதே திருநெல்வேலி மாவட்டத்தை டெங்குகாய்ச்சல் தாக்கி 29 உயிர்களை பறித்தெடுத்தது. அப்படி ஒரு முன் அனுபவம் இருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள் தெரிய ஆரம்பித்த போதே முடுக்கிவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?
நெல்லை மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் நாள்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கிய போது இக்காய்ச்சலைக் கண்டறியும் கவுண்டிங்மெஷின் என்ற கருவி நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே இருந்துள்ளது. அதுவும் ஒன்றே ஒன்று!
இது மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகித டாக்டர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை என மக்கள் உயிருக்கு போராடிய காலகட்டத்தில் அனுபவித்த அவலங்கள் வார்த்தைகளில் வடித்தெடுக்க இயலாதவை!
நடந்தவைகள் நமக்கு ஒரு ஆழமான படிப்பினையாக அமையட்டும்!
இனி செய்ய வேண்டியது என்ன?
தேவையற்ற குப்பைக் கூளங்களை அகற்றும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் உரியதன்று. மக்களும் இதில் பங்கேற்க வேண்டும். எங்கேயும் தண்ணீர் தேங்கி நிற்காமல் பாதுகாக்க வேண்டும்! தண்ணீர் விநியோகம் தடையின்றி இருக்கும் பட்சத்தில் கிடைத்த தண்ணீரை ஒருவாரம் வரை அடைகாக்க வேண்டியிராது!
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு என்பது நோய் பரவும் காலகட்டத்தில் என்றில்லாமல் எப்போதுமே நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறும் வகையில் நமது காலாச்சார கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம்!
இதில் மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாத்திரமல்ல, ஒவ்வொரு தனி நபருக்குமே உள்ளார்ந்த ஈடுபாடு வேண்டும்.

25.5.2012

No comments: