Wednesday, July 3, 2013

டெசோ; கருணாநிதியின் கபட நாடகம்



மீண்டும் "டெசோ" என்ற அமைப்பை உருவாக்கி, தனி ஈழத்தை இலங்கையில் உருவாக்க குரல் கொடுக்கப் போவதாக தி.மு. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது இல்லாத ஊருக்கு போக முடியாத பயணத்தைப் பற்றிப் பேசுவதைப் போல உள்ளது.
"டெசோ" என்ற அமைப்பு 1985-ல் உருவாக்கப்பட்டு, தாக்குப்பிடிக்கமுடியாமல் மிகக்குறுகிய காலத்தில் தடயமில்லாமல் தானாகவே உருக்குலைந்து மறைந்து போனது என்பது கடந்த காலவரலாறு.
அதுமட்டுமின்றி கால் நூற்றாண்டுக்கு முன்பு இலங்கைப் பிரச்சினையை இந்தியாவும் குறிப்பாகத் தமிழகமும் அணுகிய விதத்திற்கும் இன்றைக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டு. மாற்றங்கள் கணக்கிலடங்காது.
காலமாற்றத்தில் ஒரு வரலாற்று சுழற்சியே நடந்துள்ளது. இலங்கையிலேயே தமிழ் ஈழம் என்ற குரல் அந்தத் தமிழர்களிடையே பெரும் முழக்கமாக இருந்த நிலைமாறி ஏதோ ஒரிருவரிடமிருந்து வெளிப்படும் ஈனஸ்வரமாகிப்போனது.
அங்குள்ள தமிழர்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான தவிப்பில் தகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தனி ஈழம் கேட்கவில்லை என்று சமீபத்தில் அங்கு சென்றுவந்த கம்யூனிஸ்ட் எம்.பி.டி.கே. ரங்கராஜனும், காங்கிரஸ் எம்.பிகளும் கூறி உள்ளதை கவனிக்க வேண்டும்.
அன்று `டெசோ` மாநாட்டில் கலைஞரோடு கைகோர்த்தவர்களில் பலர் எதிர்நிலை எடுத்துள்ளனர். குறிப்பாக வாஜ்பாய், சுப்பிரமணியசுவாமி போன்ற வட இந்திய அல்லது தென்னிந்திய தலைவர்கள் யாருமே- தமிழகத்தை கடந்துள்ளவர்கள்- தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. தமிழ்நாட்டிலே கூட அன்று கலைஞரோடு ஒரணியில் நின்ற பழ.நெடுமாறன், வை.கோபால்சாமி.. போன்றோர் இன்று தி.மு.கவை நம்பத் தயாராயில்லை. பூகோள ரீதியாக இன்று அங்கே குறிப்பிட்ட நிலப்பரப்பில் குவியலாக வாழவில்லை தமிழர்கள்!
அரசியல் ரீதியாகவும் ஒன்றுபடவழியின்றி அணிபிரிந்து நிற்கிறார்கள். பொருளாதார ரீதியிலோ முற்றிலும் பொலிவிழந்து நிற்கிறார்கள்! சர்வதேச அளவில் தனி ஈழத்தை ஆதரிக்க ஒரே ஒரு நாடு கூட இன்றுவரை முன்வரவில்லை. அவர்களுக்கு எது தேவை என்பதை அந்நிய தேசத்திலுள்ள ஒரு அரசியல் தலைமை தீர்மானிக்க முடியாது!
இன்று தனி ஈழம் கேட்டதால் உள்ளதையும் இழந்து நிற்கிறது தமிழ் இனம்!
தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக அந்நிய நாட்டில் வாழும் தமிழர்களை பலிகடாவாக்கக் கூடாது. இங்கே உருவாக்கப்படும் அரசியல் சர்ச்சைகளால் ஏற்கெனவே இன்னலில் உழன்று கொண்டிருக்கும் அவர்களை இக்கட்டில் இழுத்துவிடலாகாது!

26.04.2012

No comments: