Wednesday, July 3, 2013

மாவோயிஸ்டுகளும், மத்தியஅரசும்



மக்கள் சேவையில் ஆர்வமாக ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது மாவோயிஸ்டுகளுக்கு தனிப்பட்ட கோபம் இருப்பதாகத் தெரியவில்லை. தங்கள் கோரிக்கைகளிலுள்ள தார்மீக நியாயங்கள் சிலவற்றை அரசாங்கத்தின் செவிட்டு செவிகளில் விழுவதற்கான கருவியாக இந்த கடத்தலும், இந்த கலெக்டரும் அமைந்துவிட்டது- அவர்களுக்கு!
அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் கடத்தல் எபிசோடுகள் நமக்கு ஒரு விஷயத்தை உறுதிபடுத்துகிறது. இந்தியாவிலுள்ள அறுநூற்று சொச்சம் மாவட்டங்களில் 150 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் மறைமுக ஆட்சியே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்த தேசத்தின் கால்பகுதி அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. அப்பகுதி மக்களின் கணிசமான ஆதரவும் இதற்கு கிட்டியுள்ளது. அதாவது அந்தப் பகுதிமக்களால் அரசாங்கத்தின் அதிகாரம் மாவோயிஸ்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அலெக்ஸ் பால்மேனனை கடத்திய விவகாரத்தை உற்றுநோக்கும் போது அவர் கடத்தப்பட்ட விதம், அவரை மாவோயிஸ்டுகள் கையாளும் விதம், தூதுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நபர்கள்.. என எல்லாவற்றிலும் ஓர் அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. ஆகவே, அவர்களால் அலெக்ஸ் பால்மேனனின் உயிருக்கு ஒரு போதும் ஆபத்து ஏற்படாது என நாம் நம்பலாம்.
அதே சமயம் அவர்கள் நிபந்தனைகள் சிலவற்றில் நியாயங்கள் இருப்பதாக பிரசாந்த் பூஷன் கூறியுள்ளது கவனத்திற்குரியது. பசுமைவேட்டை என்ற பெயரில் பழங்குடி இளைஞர்கள் சிலரையே சட்டவிரோதமாக வன்முறைபாதையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசாங்கம் பணம்தந்து அடியாட்களாக அமர்த்துவதும், அப்பாவி மக்களையெல்லாம் மாவோயிஸ்டுகள் என்று கைது செய்து துன்புறுத்துவதும் மக்களிடம் மாவோயிஸ்டுகள் செல்வாக்கு வளர்வதற்கே துணைபுரியும். அது தான் நடந்து முள்ளது. கடத்தப்பட்டு ஐந்து நாட்களாகியும் அரசு இயந்திரம் ஆமைவேகத்தில் தான் நகர்கிறது. அரசு தரப்பில் இரண்டு முன்னாள் தலைமைச் செயலாளர்களும் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள ஹைதராபாத் பேராசிரியர் ஹரிகோபாலும் வெகுவிரைவில் அனுப்பப்படவேண்டும்.
மாவோயிஸ்டுகளின் கோரிக்கை மூன்றில் இரண்டிலிலுள்ள நியாயங்களை அரசே மறுக்க முடியாது. அதோடு அவர்களது மூன்றாவது கோரிக்கையில் விடுவிக்க கோரும் எட்டு நபர்களில் கோபண்ணா என்ற தலைவரும், பத்திரிகையாளர் ஒருவரும், மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மனைவியும் விடுவிக்கத் தக்கவர்களே என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே இந்த விஷயத்திலும் அரசு விட்டுக் கொடுத்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏவை (நான்கு கெடுதேதிகள் கடந்தும்)ஒரு மாதகாலம் எவ்விதத்திலும் துன்புறுத்தாமல் வைத்திருந்து ஒரளவு கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் திருப்தி அடைந்து விடுதலைக்கு அனுமதித்துள்ளனர் என்னும் போது, மக்கள் சேவையில் நல்ல பெயர் எடுத்திருக்கும் அலெக்ஸ்பால் மேனன் மீது மாவோயிஸ்டுகளுக்கு தனிப்பட்ட வெறுப்பு இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அரசாங்கத்துடன் பேரம் நடத்த கடத்தப்பட்ட நபர் ஒரு கருவி அவ்வளவே! அலெக்ஸ் பால் மேனனின் உடல் நிலை அவர் மாவோயிஸ்ட்டுகளின் கஸ்டடியில் நீண்ட நாட்கள் இருக்க இடம் தராது என்பதால் இந்த விவகாரத்தை விரைந்து முடிவுக்கு கொண்டுவரவே மாவோயிஸ்டுகள் விரும்புவர். அரசும் இதை உணர்ந்து அதிவேகத்துடன் செயல்பட்டு இளம் ஆட்சியரை மீட்க வேண்டும் அதோடு மக்கள் நலன்களுக்கு எதிரான எந்த சட்டத்தையும், திட்டத்தையும் முற்றாக கைவிட்டு, இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடிமக்களின் வாழ்விடங்களில் கார்ப்பரேட் வல்லூருகள் கால்பதிக்காமல் தடுக்க வேண்டும்.

25.4.2012

No comments: