Wednesday, July 3, 2013

ஏர் இந்தியா ஏப்பம்விடும் மக்கள் பணம்



பத்து நாட்களைக் கடந்து ஏர்இந்தியா விமான பைலட்டுகள் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பல விமான சர்வீஸ்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு வருவதால் ஏற்கெனவே திட்டமிட்டு பதிவு செய்து வைத்த பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது விமான முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த  குறுகிய காலகட்டத்திலேயே இதனால் சுமார் 200கோடி  ஏர் இந்தியாவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி ஸ்டிரைக், போராட்டம், சம்பள உயர்வு... என பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது ஏர் இந்தியா. எனவே இழப்புகளும் அதற்கு புதிதல்ல!
இந்தியாவில் தற்போது மொத்தம் ஆறு விமான சேவை நிறுவனங்கள் செயல்படுகின்றன.
நீண்ட அனுபவம்  பெற்றிருந்தும் அண்மை காலத்தில் வந்த தனியார் நிறுவனங்களை விட வளர்ச்சியில் தற்போது பின் தங்கியுள்ளது ஏர் இந்தியா!
1993-ல் களத்துக்கு வந்த ஜெட் ஏர்லைன்ஸ் இன்று இந்திய விமான சர்வீஸ்களில் முதன்மை இடம் வகிக்கிறது. இத்தனைக்கும் இதன் ஊழியர் பலம் சுமார் 10,000 தான்! ஆனால் ஏர் இந்தியாவிலோ 32,000!
இவ்வளவு ஏன்? இண்டிகோ விமானச் சேவை 2006-ல் ஆரம்பிக்கப்பட்டது. மிகக் குறைந்த விமான கட்டணத்தின் மூலம் விரைவிலேயே அதிக பயணிகளின் ஆதரவைப் பெற்று அது தற்போது ஆண்டுக்கு 650 கோடி லாபம் ஈட்டுகிறது.
ஆனால் ஏர் இந்தியாவோ ஏகப்பட்ட நஷ்டத்தில் ஊழல்கிறது. 2006-2007ல் ஏர் இந்தியாவின் நஷ்டம் 770 கோடி. மார்ச்-2011 நிலவரப்படி ஏர் இந்தியாவின் கடன் 42,570கோடி!
இழப்போ 22,000 கோடி!
எனவே அரசு ஆண்டுக்காண்டு தங்களுக்கு வழங்கும் மானியம் போதாது, என மேலும் 42,920 கோடி வேண்டும் என்றது ஏர் இந்தியா!
2009-ல் தான் இந்திய அரசு ஏர் இந்தியாவிற்கு 3,200 கோடி தந்தது. அப்போதும் போதவில்லை என்பதால் அமைச்சரவை கூடி விவாதித்து தற்போது 30,000 கோடி கொடுத்துள்ளது. இதற்குப் பிறகாவது ஏர் இந்தியா எழுந்து நிற்குமா? என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் எவரும் கூறுவர்.
என்ன காரணம்?
அபரிமிதமான ஊழல், அலட்சியத்தில் ஊறித்திளைக்கும் நிர்வாகம், பொறுப்பை தட்டிக் கழிக்கும் ஊழியர்கள், தரமில்லா சேவை, ஏகப்பட்ட புகார்கள், எப்போதும் காலதாமதம்... இப்படி பிரச்சினைகள் ஏராளம்!
எனவே ஏர் இந்தியா என்ற திமிங்கலம் எவ்வளவு கொடுத்தாலும் விழுங்கிக் கொண்டே தான் இருக்கும்!
அப்படியானால் இதற்கு விமோச்சனம் தான் என்ன?
பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு அள்ளி அள்ளி அனுபவிக்கும் புதையல் என்ற புரிதல் ஏற்பட்டு பல வருடங்களாகிறது.
இவை கேட்பாரற்ற கேந்திரம்! எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் அதை அரசு கஜானாவிலிருந்து எடுத்து சமாளித்துவிடலாம் என்றாகிவிட்டது. எங்கே தலைமை சரியாக இல்லையோ- அதற்குப் பிறகு கீழ்மட்டம் வரை நடக்கும் அவலங்களை யாராலும் தடுக்க முடியாது! இதுதான் ஏர் இந்தியாவில் ஏகத்துக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இது ஏர் இந்தியாவிற்கு மட்டுமின்றி ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்துவதாகவே உள்ளது.
மிக நல்ல லாபம் ஈட்ட வேண்டிய துறைகளிலெல்லாம் இவை மிக அதிக நஷ்டத்தை சந்தித்துக் கொண்டுள்ளன. தேவைக்கதிகமான அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
மக்கள் பணம் மதிப்பில்லாமல் பாழாகிறது.
அரசியல் அறமும், நிர்வாகத் திறமும் அற்று போய்க் கொண்டிருக்கும் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் தேவைதானா?
மறுபரிசீலனைக்கான காலம் மலர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
நிர்வாகத்தில் அரசியல்ரீதியான தலையீடுகள் அறவே தடுக்கப்பட்டாக வேண்டும். ஊழியர்களின் ஒழுங்கீனம் களையப்பட்டாக வேண்டும். வெளிப்படையான நேர்மையான நிர்வாகத்தைத் தரவல்ல வல்லுநர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வழி நடத்த வேண்டும். மத்திய அரசு பொறுப்பான அதிகாரிகளுக்கு நல் ஆதரவு வழங்க வேண்டும்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி, அதிகார வர்க்கம் வரை இதில் அடையும் ஆதாயங்கள், அதீத சலுகைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நமது நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி சமீபத்தில் குறிப்பிட்டது போல, ஒரு தீவிரமான பொருளாதார நெருக்கடிக்கு நாடு உள்ளாகி இருக்கும் நேரத்தில், அனைத்து மட்டத்திலும் சிக்கன நடவடிக்கை அவசியமாகிறது. ஆனால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் வகுப்பு பயணத்தை தவிர்த்து இரண்டாம் வகுப்பு பயணிக்கலாம் என்ற பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கே, பிரம்மாண்ட எதிர்ப்பு உண்டாகிவிட்டது.
 இது மிகவும் துர் அதிர்ஷ்டம்!
அரசியலில் அறம் நிலைநாட்டப்பட்டால்தான் நிர்வாகத்திறன் சிறந்தோங்கும்! இவ்வளவு கடும் பொருளாதார நெருக்கடிக்கிடையிலும் ரூ.30,000 கோடி ஏர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள போது, அதை முறையாகவும், சிறப்பாகவும், பயன்படுத்தி - குறைந்தபட்சம் ஏர் இந்தியாவை லாபமில்லாவிட்டாலும், நஷ்டதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு!

18.5.2012

No comments: