Wednesday, July 3, 2013

புதைக்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல்



கால்நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவையே கதிகலக்கி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட ஊழல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்! இந்திய ராணுவத்திற்கு ரூ1500 கோடியில் ஸ்வீடன் நாட்டிலிருந்து வாங்கப்பட்டது போபர்ஸ் பீரங்கிகள், இதில் இந்த இருநாட்டிற்குமே சம்பந்தமில்லாத இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் குவத்ரோச்சி சம்பந்தப்பட்டு 64 கோடி ரூபாய் ஆதாயமடைந்தார். இவர் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாவின் நெருங்கிய குடும்ப நண்பர். எனவே இதில் ராஜீவ்காந்தி, வின்சாத்தா, அன்றைய பாதுகாப்புச் செயலாளர் எஸ்.கே. பட்நாகர், பிரிட்டனைச் சேர்ந்த ஹிந்துஜா சகோதரர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.
உண்மையில் அந்த போபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் வெடித்த போது கூட இத்தனை பெரிய அதிர்வுகள் நிகழ்ந்திருக்க வாய்பில்லை. ஆனால் இந்த ஊழல் வெடித்ததால் நாடெங்கும் புயல் ஏற்பட்டதோ, பூகம்பம் ஏற்பட்டதோ என்றளவுக்கு எதிர்கட்சிகளால் பிரச்சாரங்கள் நடந்தன. அனைத்து எதிர்கட்சி எம்.பிகளும் ராஜீனாமா செய்தனர். இந்திய மக்களுக்கு ஏற்பட்ட தார்மீக கோபத்தின் விளைவால் ராஜீவ்காந்தி தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், இந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வி.பி.சிங் அரியணை ஏறியதும் வரலாறு.
இருபத்தி ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் இந்த வழக்கில் இம்மியளவு கூட முன்னேற்றமில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட யாருமே சட்டத்தின் பிடிக்குள் அகப்படவில்லை. ஆனால் இதற்காக இந்திய அரசாங்கம் விசாரணை என்ற வகையில் 250 கோடி வீணடித்தது தான் கண்டபலன்! அதாவது, Ô64 கோடி ரூபாய் ஊழலை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்Õ என்ற வகையில் 250 கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. இது அந்த ஊழலையே விஞ்சிவிடக் கூடிய அளவிலான திட்டமிட்ட நாடகமாக நடந்தேறியிருக்கிறது எனும் போது இதை இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. சமீபத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒய்வுபெற்ற காவல்துறை தலைவர் ஸ்டென் லின்ஸ்ட்ராம் இந்த போபர்ஸ் ஊழல் குறித்த உண்மைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தினார். இதைத் தொடந்து இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே கூச்சல், குழப்பம் அமளிகள் அரங்கேறின.
*           இந்த ஊழலில் குவத்ரோச்சியை இந்தியாவிலிருந்து தப்பவிட்டது,
*           அவர் பிரேசில், மலேசியா போன்ற இடங்களில் இருப்பதாக தகவல்கள் வந்தும் அவரை                                காணவில்லை என கையைவிரித்தது,
*           விசாரணையில் இறங்கிய சி.பி.ஐயை வேண்டுமென்றே முடக்கி வைத்தது,
*           அவரை கைதுசெய்யும்படி சர்வதேச போலீசுக்கு வைக்கப்பட்ட வேண்டுகோளை                                                 திரும்பப்பெற்றது,
*           ஊழல் பணத்தை குவத்ரோச்சி லண்டனிலுள்ள இரு வங்கிகளில் போட்டு                                       வைத்திருப்பது, தெரியவந்த பிறகும் முழவதுமாக எடுத்துக்கொண்டு தப்பிக்கும் வரை                          பொறுத்திருந்தது,
*           இது சம்பந்தமான வழக்குகளை முறையாக நடத்தாது.
 என எல்லாவகையிலும் போபர்ஸ் ஊழலை மூடிமறைக்க காங்கிரஸ் அரசு கடந்த ஆட்சிகளில் செயல்பட்டதாக எதிர்கட்சித் தலைவர்கள் பொங்கி எழந்தனர்.
அடடே என்னே ஒரு தார்மீக கோபம்...!
அப்பப்பா...!
``ஆனால், ஸ்டென் லின்ஸ்ட்ராம் தன் பேட்டியில் ராஜீவ்காந்தி இதில் ஆதாயமடையவில்லை எனக்கூறியுள்ளாரே..  ``என ஆளும் கட்சியினர் பெருமைபட்டுக் கொண்டனர்.
இதுவும் சரி தான், உண்மை தான்! ஆனால் ஸ்டென்லின்ஸ்ட்ராம் பேட்டியை ஊன்றி படித்தவகையிலும், 25 ஆண்டுகளாக இந்த நாட்டில் இது தொடர்பாக நடந்துள்ளவற்றை அவதானித்தவகையிலும் ஒன்றை நம்மால் உறுதியாக சொல்லமுடியும் அது, உண்மையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என இருதரப்புமே மக்களை ஏமாற்றி வருகின்றன.
வி.பி.சிங் ஆட்சியிலும், பா.. ஆட்சியிலும் இந்த ஊழலை வெளிக் கொணர்வதில் அக்கரை காட்டப்படவில்லை என்பதையும், ராஜீவ்காந்தி நேரடியாக பண ஆதாயம் பெற்றதாக தெரியாவிட்டாலும் அவர் எல்லாம் தெரிந்திருந்தும் குற்றவாளிகளை தண்டிக்காமல் அமைதிகாத்தார் என்பதையும் அந்த காவல் துறை அதிகாரி தெளிவுபடுத்தி உள்ளார். இதிலிருந்து, நம் நாட்டில் எந்த ஒரு பெரிய ஊழலும், எந்த ஒரு கட்சிக்குமே, ஆதாய அரசியலுக்கும், அதிகாரமையத்தை அடைவதற்குமே உதவுகின்றன என்பதே நாம் உணரவேண்டிய உண்மையாகும்! மக்களிடம் உருவாக்கப்படும் தார்மீக கோபங்கள் அவர்களின் ஓட்டு அறுவடைக்கு உதவுகின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஒருவர் ஊழலை மற்றவர் புதைகுழிக்குள் தள்ளி பரஸ்பரம் பாதுகாத்து கொள்கின்றனர்.
தண்டனைகள் எப்போதும் மக்களுக்கானதேயன்றி அரசியல்வாதிகளுக்கல்ல.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவோம்....?

27.4.2012

No comments: