Wednesday, July 3, 2013

கூடன்குள அணுமின் நிலைய எதிர்ப்பு - அரசின் கடமை என்ன?



விளங்கிக் கொள்ள இயலாத விசித்திரமாக கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அணுமின் நிலையம் செயல்படக்கூடாது என்ற உறுதியான போராட்டவடிவம் தற்போது அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சம் தொடர்பான கவலைகளையும், அதில் அரசாங்கம் காட்டிவரும் அலட்சிய போக்குகளையும் எதிர்க்கும் வடிவம் கண்டுள்ளது.
இது ஒரு உன்னத லட்சியத்தை முன்நிறுத்திய பொதுநலன் சார்ந்த போராட்டம் என்பதில் சந்தேகமில்லைஅதுவுமின்றி இதுவரை இவ்வளவு நீண்டநெடிய போராட்டம் ஒன்றை தமிழகம் கண்டதுமில்லை.
பெருந்திரளான மக்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு  எந்த அசம்பாவிதங்களையும் விளைவிக்காமல் சுமார் எட்டுமாதங்களாக போராட்டம் நடத்தியும் இதில் எந்த ஒரு தீர்வையும் எட்டாமல் திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு மக்களின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என்ன? என்று பார்த்தால் அதில் ஆபத்தோ, நிறைவேற்றமுடியாத அம்சங்களோ எதுவுமில்லை.
"அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் முடித்துக்கொண்டோம். ஆனால், 'எங்கள் மீதுள்ள நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுவிடுவோம்' என வாய்மொழி உறுதி தந்த மாநில அரசு அதை நிறைவேற்றாமல் சுமார் 65,000பேரை கோர்ட், கேஸ் என இழுத்தடிக்கிறது. இது மக்களை விரக்திக்கும், வேதனைக்கும் ஆட்படுத்தியுள்ளது.
அடுத்ததாக விபத்து நேர்ந்தால் அதை சமாளிப்பதற்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி அவசியம். அதைக் கூட தரமறுக்கிறது" என்கிறார்கள் போராட்டக் குழுவினர்.
நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலே இந்த போராட்டம் 90 சதவிதம் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் ஏனோ தெரியவில்லை அரசாங்கம் போராட்டக் குழுவினர் விசயத்தில் அதீத அலட்சிய போக்கை கையாள்கிறதாகவே தெரிகிறது. முதலில் இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்வரின் ஆதரவு இருப்பது போல் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. "மக்களின் அச்சம் முழுமையாக போக்கப்படவேண்டும். அதற்குப் பிறகே அணுமின்நிலையப்பணிகளை ஆரம்பிக்கவேண்டும்" என்றார் முதல்வர். அதோடு நிற்காமல் பிரதமரோ, மத்திய அமைச்சர் எவருமோ ஏன் போராடும் மக்களை சந்திக்கவில்லை? என்ற கேள்வியையும் தமிழக முதல்வர் எழுப்பினார். ஆனால் அந்த கேள்விகளை முதல்வர் தன் அரசுக்கும் இன்று பொருத்திப் பார்க்கவேண்டும்.
தமிழக அமைச்சர்கள் ஒரே ஒரு வாரம் கூடங்குளத்தில் முகாமிட்டு மக்களிடம் அன்பையும், அரவணைப்பையும் வெளிப்படுத்தினால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும். அதோடு முதல்வர் ஜெயலலிதா ஒரே ஒரு நாள் கூடங்குளத்திற்கு விசிட் அடித்து மக்கள் குறைகளைக் கேட்டால் போராட்டம் முற்றாக முடிவுக்கு வந்துவிடும்.
இந்த மக்கள் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். 500 கோடி நிதியுதவியால் கூட அசைந்து கொடுக்காத மக்கள் இன்று தாங்கள் அநாதவராக நிற்பதாக உணர்கிறார்கள். தங்கள் மீதான அரசின் அலட்சிய போக்குகளே அம்மக்களை இன்று விரக்தியின் விளிம்பில் நிறுத்தி சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை 'வேண்டாம்' என ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
ஆனால் போராட்ட குழுவினரின் இந்த நிலைபாடு ஆரோக்கியமான ஒன்றல்ல, எந்த ஒரு போராட்டத்திற்கும் தெளிவான இலக்குகள் அவசியம். அதோடு நம்பிக்கையும் முக்கியமாகும். ஆனால் இந்த போராட்டமோ தெளிவற்ற இலக்குகளைக் கொண்டுள்ளதோடு, ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கையின்மையை மக்களிடம் ஆழமாக விதைத்துக் கொண்டுள்ளது.
இதனால் மக்களை மேன்மேலும் துயரத்திற்கும், ஆபத்தான முடிவுகளுக்கும் அழைத்துச் செல்கிறது போராட்டத் தலைமை!

இன்று, "பேரிடர் மேலாண்மை பயிற்சி வேண்டும்" என்று 'டிமாண்ட்வைப் பவர்கள் அப்படி ஒரு முயற்சி டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டபோது, "ஓகோ இவ்வளவு ஆபத்து இருக்குமோ..." என்று அந்த முயற்சியை கொச்சைப்படுத்தி அதையே மக்களை பீதிக்குள்ளாக்கும் தந்திரமாகவும் கையாண்டார்கள் என்பதை பார்க்கும்போது அரசாங்கம் எப்படி மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடும்...?
எனவே அபார ஒற்றுமையும், அதிசயத்தக்க உறுதியையும் கொண்டுள்ள போராட்டத் தலைமை அந்தரங்க சுத்தியுடன் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தையில் இறங்கினால் அனைத்து பிரச்சினைகளும் முற்றுபெறும். அதோடு மக்களை அரவணைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்குள்ளது.


8.5.2012

No comments: