Wednesday, July 3, 2013

பிளாஸ்டிக் பிசாசுகள்



எதிர் காலத்தில் அணுகுண்டால் ஏற்படும் பேராபத்துகளை விடவும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பேராபத்துக்கள் அதிகமாக மனிதகுலத்தை பாதிக்கும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும்... என்று சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியுள்ளது.
இது ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதற்கு இந்த நீதிமன்ற ஆணையே சாட்சியாகும்! கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீதிமன்றங்கள் பிளாஸ்டிக் தடை குறித்து ஆணை பிறப்பிப்பதும், மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது சில சட்டங்கள் இயற்றுவதும்.. அவை ஏதோ கொஞ்ச காலம் பேசப்பட்டு மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு நீக்கமற எங்கும் நிறைந்து வெளிப்படுவதும் மிகவும் கவலையளிக்கிறது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நம் வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாடே இல்லை. தற்போதோ பிளாஸ்டிக் பயன்பாடில்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது.
பயன்படுத்த சுலபம், விலையும் மலிவு என்ற காரணத்தால் சேர், டேபிள், பேனா, கடிகாரம், கம்யூட்டர், வாசிங்மெஷின், பிரிட்ஜ், குப்பைத்தொட்டி, துடைப்பக்கட்டை... வரை எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. இன்று சமூகம் மிகப்பெரிய சவாலை  எதிர்கொள்ள காரணமாயிருப்பது பாலீதின் பைகள், கேரிபேக்குகள் போன்றவையே!
நீர் நிலைகள், ஆறுகள், கால்வாய்கள்... என்பவற்றின் இருபுறங்களும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பிவழிகின்றன நீரின் ஓட்டத்தை தடுத்து, இவை நிலத்திற்குள் நீர் இறங்குவதையும் தடுத்து, தேங்கிய நீரை குட்டையாக்கி கொசு பெருக்கத்தை அதிகரித்து நோய்கள் பரவ காரணமாகிறது. இதுமட்டுமின்றி நிலமெங்கும் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தை இயற்கையிடமிருந்து அந்நியப்படுத்தி மலடாக்குகின்றன. விவசாயம் வீழ்ச்சி அடைகிறது.
பிளாஸ்டிக் கேரி பேக்குகளை மிஞ்சிய உணவு பொருட்களோடு வீசி எறிகிறோம். இவை கால்நடைகளால் உண்ணப்பட்டு, அவற்றின் வயிற்றில் கிலோ கணக்குகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மூச்சு திணறி மடிகின்றன.
கடலில் மிதக்கும் கழிவுகளிலும் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகளே! இவற்றால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.
பிளாஸ்டிக் கேரிபேக்குகளில் சூடான உணவுபொருள்களை வைப்பது, மைக்ரோ வேன் அடுப்பில் பிளாஸ்டிக் டப்பா உணவை சூடுபடுத்துவது, பிரிட்ஜில் பிளாஸ்டிக் புட்டியில் நீரை உறைய வைப்பது போன்ற சமயங்களில் பிளாஸ்டிக்கின் வேதியல் நச்சுகள் வெளியேறி அந்த உணவோடு கலக்கின்றன. இவற்றை நாம் உண்ணும் போது புற்றுநோய், நுரையீரல் பிரச்சினைகள், நரம்புக்கோளாறு... போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வளவு ஆபத்துகள்  இருந்தபோதிலும் உலகில் ஆண்டொன்றுக்கு 105 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே ஆண்டொன்றுக்கு 25 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் உள்ள மேலாண்மை குறைபாடுகளே நம் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமாகும். இதில் நமது மத்திய, மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் காட்டிவரும் அலட்சிய போக்குகளால் நாம் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதாகிறது.
பிளாஸ்டிக் உற்பத்தியின் போதும், அழிப்பின்போதும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. காற்றில் நஞ்சு கலக்கிறது. புவி வெப்பமயமாதல், ஓசோன் படல ஓட்டை போன்றவை பிளாஸ்டிக் பயன்பாட்டால் உண்டாகும் பின் விளைவுகளில் பிரதானமானவையாகும்!
சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் நாளொன்றுக்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் கிலோ வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன.
அரசுகளுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இதில் பொறுப்புண்டு. இரும்பு வாளிகள், சில்வர், பித்தளைக் குடங்கள், பீங்கான் ஜாடிகள், கண்ணாடி டம்பளர் மட்டும் புட்டிகள், சணல் மற்றும் துணிப் பைகள், பிரம்புக் கூடைகள், தகர டின்கள், தகரடப்பாக்கள்... என வாழ்ந்தவர்கள் தானே நாம்!
விஞ்ஞான வளர்ச்சி நம்மை வீழ்த்த அனுமதிப்பதா?
இயற்கையின் வழியில் இறைவன் தந்த பயன்பாடுகள் எத்தனை எத்தனையோ இருக்க, எத்திலீன் மூலக்கூறுகளால் மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் நம்மை எமனாக மிரட்டுவதை அனுமதிக்கப் போகிறோமா?
எனவே நாம் அதிமுக்கியத்துவம் கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றுபுள்ளி வைக்கும் நடைமுறை சாத்தியக் கூறுகளை கை கொள்ளவேண்டும். இல்லையேல், இரண்டு தசாப்தங்களுக்குள்ளாக இமாலய பிரச்சினைகள் ஏற்படுவது உறுதி!


9.5.2012

No comments: