Wednesday, July 3, 2013

தரமான கல்விக்கு தனியாரா? அரசா?



வரவேற்கத்தக்க, சந்தோஷமான செய்தியை சட்டசபையில் அரசு தெரிவித்துள்ளது.
 தமிழகத்தில் 2 பொறியியல் கல்லூரிகள், 11 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 பாலிடெக்னிக்குகள் அரசு தொடங்கப்போவதாக வெளியான செய்தியால் மாணவ சமுதாயத்தின் நீண்டகால தேவை நிறைவேற உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 3லட்சம் மாணவர்கள் உயர்கல்வி துறையில் படிக்க வருகின்றனர். ஆனால் இவர்களின் 10 சதவிகிதத்தினரின் உயர்கல்வித் தேவை கூட அரசால் பூர்த்தி செய்யப்படுவதில்லை. உதாரணத்திற்கு பொறியியல் படிப்பை எடுத்துக் கொண்டால் சுமார் ஒன்றரரை லட்சம் மாணவர்கள் சென்ற ஆண்டு இன்ஜினியங்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இவர்களில் சுமார் 90 சதவிகிதத்தினர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் தாங்கமுடியாத கட்டணம் செலுத்தி சேர்ந்துள்ளனர். தனியார்கல்லூரிகளுக்கும், அரசு கல்லூரிகளுக்குமான கல்வி கட்டணங்கள் மலைக்கும், மடுவுக்குமான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. வெகு சில வசதியானவர்களை தவிர பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி என்ற உன்னத லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்குள் பெரும் கடனாளியாகிவிடுகின்றனர்.
வீட்டை விற்றோ அடமானம் வைத்தோ, நகைகளை விற்றோ அடமானம் வைத்தோ, வங்கிகளில், நண்பர்களிடம், உறவினர்களிடம், என பலதரப்பிலும் கடன் பெற்று அடைகின்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி உயர் படிப்பில் சேர்ந்தாலுமே கூட இவர்களில் சுமார் 20 சதவிகிதத்தினர் மட்டுமே தனியார் கல்லூரிகளில் தரமான கல்வியை பெறும் வாய்ப்புள்ளது.
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் 527 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 60 கல்லூரிகள் சிறந்த தரத்திலும், மற்றவை சுமார் தரத்திலும், பல மோசமான தரத்திலும் இயங்குகின்றன. இதனால் தான் இவற்றில் சுமார் 60 சதவிகித இடங்கள் பூர்த்தியாவதில்லை. அண்ணாபல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட 22 அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்ற அனைத்து தனியார் கல்லூரிகளை காட்டிலும் முதல் தரத்தில் செயல் படுகின்றன. எனவே தான் இவற்றில் கடும் போட்டிகள் நிலவுகின்றன. அதனால் வேறு வழியில்லாமல் அதிக பணம் கட்டியும், தரமானகல்வியை பெறமுடியாமல் பெரும்பாலான மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இதைப்போலவே கலை அறிவியல் கல்லூரிகள் தனியார் தரப்பில் 416 என்றால் அரசு தரப்பிலோ வெறும் 62 தான்! ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளோ தனியார் 639 என்றால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மொத்தம் 21 தான்! இதனால்தான் அங்கீகாரமில்லாத ஆசிரியர் பயிற்சிகல்லூரிகள் புற்றீசல்கள் போல் தோன்றி தரமற்ற ஆசிரியர்களை பிரசவிக்கின்றன.
இது எதிர்காலச் சமுகத்திற்கே கேடாகும்! சமீபத்திய அறிவிப்பில் ஆசிரியர்பயிற்சி கல்லூரிகள் அறிவிக்கப் படாதது பெரும் ஏமாற்றமே! எனினும் எதிர்காலத்தில் இந்த தேவைகளையும் ஈடுகட்ட அரசு முயற்சிக்கும் என நாம் நம்புவோம்.
இதே போல் புதிய மருத்துவகல்லூரிகளும், அரசு சார்பில் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த சமயத்தில் ஒரு முக்கிய வேண்டுகோளையும் நாம் வைக்கவிரும்புகிறோம். சமீபகாலமாக புதிதாக உருவாக்கப்படும் அரசு கல்லூரிகள் அடிப்படை கட்டமைப்பு இன்றியும், ஆசிரியர்கள் பற்றாக்குறையுடனும் அவதிக்கு ஆளாகின்றன. சில கல்லூரிகளில் முதல்வர் பணியிடத்திற்கு கூட முக்கியத்துவம் தராமல் நீண்டகாலம் வெறுமையாக வைக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம்!
இந்தக்குறை கண்டிப்பாக களையப்படவேண்டும். புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கும் போதே அனைத்து தேவைகளையும் கவனத்தில் கொண்டு போதுமான நிதியை தயக்கமில்லாமல் ஒதுக்கி, அப்படியும் ஈடுகட்டமுடியவில்லை என்றால் 10 சதவிகித இடங்களை கூடுதலாக வசதிபடைத்த மாணவர்களுக்கு ஒதுக்கி அதனால் கிடைக்கும் நிதியை வைத்துக் கொண்டு 90 சதவிகித மாணவர்களின் கல்வித் தேவைகளை குறையின்றி நிறைவேற்றலாம்.
கல்வித்துறை முதலீடுகளில் அரசாங்கத்தால் காசுபார்க்கமுடியாது, ஆனால் அவை எதிர்காலச் சமுதாயம் செழித்தோங்கி வளர்வதற்கு தூவப்படும் விதைகள் என்பதை மறுக்கமுடியாது.



No comments: