Tuesday, May 21, 2013

அன்னாஹசாரேவும், அரசியல் சர்ச்சைகளும்-61




சமூக, அரசியல், பொதுவாழ்க்கை தளத்தில் ஊழல், லஞ்சம், மோசடி, வன்முறை போன்றவை தலைதூக்கியிருக்கும் தற்காலச் சூழலில் அதை தட்டிக் கேட்கும் விதமாக காந்தியவாதியாக முன்நிறுத்தப்பட்ட அன்னாஹசாரே அவர்கள் போர்க்குரல் எழுப்பினார். காந்தியவாதியாக முன்நிறுத்தப்பட்டதால் அன்னாஹசாரேவின் போராட்டத்திற்கு அளப்பரிய வரவேற்பும், முக்கியத்துவமும் ஊடகங்களிலும், மக்களிடமும் வெளிப்பட்டது.
ஆனால் ஊழல் ஒழிப்பு, நேர்மையான பொதுத்தொண்டு, லஞ்சலாவண்யமற்ற அரசு நிர்வாகம், போன்றவற்றை சாத்தியப்படுத்துவது குறித்த அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினரின் அணுகுமுறைகள் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி கொண்டிருப்பதோடு, பொதுமக்களின் ஆர்வமும் இதில் குறையத் தொடங்கியிருப்பது துர் அதிர்ஷ்டமே! இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டியதுடன், தங்களை சுயவிமர்சனத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டியது அன்னாஹசாரே குழுவினரின் கடமையாகும்!
முதலில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் ஒழியவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக லோக்பால் மசோதா ஒன்றை வடிவமைத்தனர் அன்னாஹசாரே குழுவினர்.
ஆரம்பத்தில் அதை அலட்சியப்படுத்திய அரசு அன்னாஹசாரேவிற்கு பெருகிவந்த மக்கள் ஆதரவை கருத்தில் கொண்டு அம்மசோதாவை பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
அம்மசோதாவின் கடுமை, நடைமுறைசிக்கல்கள் விவாதத்திற்குரியவை என்பதில் நடுநிலையாளர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதே சமயம் அதற்கு மாற்றாக அரசு முன்வைத்த லோக்பால் சட்டம் அந்த உன்னத நோக்கத்தை நீர்த்துபோக வைப்பதாக இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இந்த விவகாரத்தில் அன்னாஹசாரே குழுவினர் மிகவும் அவசரப்படுவதுடன், அடிக்கடி ஆவேசப்பட்டும், ஆத்திரப்பட்டும் அறிக்கைகள் விடுவதும், பொது மேடைகளில் உணர்ச்சிவசப்படுவதும் அந்த உன்னத நோக்கத்திற்கு மிகவும் பின்னடைவை தருவதாக உள்ளது.
தற்போது அன்னாஹசாரே குழுவிலுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கிரிமினல் பின்னணி மற்றும் நம்பகத்தன்மை குறித்து பொதுமேடையில் பேசிய கருத்து அனைத்து கட்சி எம்பிக்களையுமே அன்னாஹசாரேவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசவைத்துவிட்டது.
முதலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிரியாக பாவித்து அதற்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொண்ட அன்னாஹசாரேவும், அவரது குழுவினரும் தற்போது அனைத்து கட்சியினரின் எதிர்ப்பையும் சம்பாதித்திருப்பது கவலையளிக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் 162பேர் கிரிமினல் பின்னணி மற்றும் கொலை, மோசடி புகார்களில் சம்மந்தப்பட்டவர்கள்... இவர்கள் எப்படி கிரிமினல் சட்டதிருத்தத்திற்கும், ஊழல் எதிர்ப்புக்கும் குரல் கொடுக்க முடியும்? என்று அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுள்ளார்.
இந்தபேச்சில் உண்மை இருக்கலாம். ஆனால் இது போன்ற பக்குவமற்ற அதிரடி பேச்சுகள் காந்திய வழிமுறை அல்ல.
ஜனநாயக நாட்டில் நல்லவர், தீயவர், யோக்கியமானவர்... என்ற அளவுகோலைக் கொண்டு எதையும் சாதிக்கமுடியாது.
ஒரு மோசமான எதிரியிடம் கூட முழுநம்பிக்கை வைத்து அவர் மனதில் மறைந்திருக்கும் நல்ல எண்ணத்தை தட்டி எழுப்பி அவரை நல்ல நோக்கத்திற்காக செயல்பட வைப்பதே அஹிம்சை போராட்டத்தின் ஆதார சுருதியாகும்.
அதனால் தான் அன்று காந்திக்குப் பின்னால் திரண்ட பெருந்திரளில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆர்.எஸ்.எஸ்,சோசலிஸ்ட், சநாதனி, முற்போக்காளர், ஏழைகள், பெரும்பணக்காரர்கள்... என சகல முகங்களும் இருந்தன. அவ்வளவு ஏன் பிரிட்டிஷ் பிரஜைகள் பலரே காந்தியின் தீவிரத் தொண்டர்களாகினர்!
தனது 30 வருட நீண்ட, நெடிய போராட்டத்திற்கு பிறகே காந்தி விடுதலை இந்தியாவை வென்றெடுத்தார்.
கறாரான சட்டத்தின் மூலம் மட்டுமே ஊழலை ஒழித்து உன்னத இந்தியாவை உருவாக்கிட முடியாது. அதற்கு அரசியல்வாதிகளையும் உள்ளடக்கிய பெருந்திரளான மக்களின் மனமாற்றமே அவசியமாகிறது. அதற்கு அதிரடி சாகச பேச்சுகள் உதவாது. ஒன்றுபடுவதே ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம்.
27.3.2012

No comments: