Tuesday, May 21, 2013

காப்பாற்றப்படுமா? - செம்மொழி தமிழ் உயராய்வு மையம்




உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மொழிகள் இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. ஆனால் அவற்றுள் உலக அளவில் எட்டு மொழிகளே செம்மொழிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழியும் ஒன்று. 2008 ஆம் ஆண்டு நம் இந்திய அரசு தமிழை The world classical language  என ஏற்று அங்கீகாரம் அளித்தது. உலக மொழியியல் அறிஞர்கள் பலர் தமிழைச் செம்மொழி என்று இந்த உலகிற்கு பறைசாற்றியுள்ளனர். இதன் காரணமாக சர்வதேச பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் தன் தகுதிக்கான தனி இருக்கையை தமிழ்மொழி பெற்றிருந்தது. நம் மத்திய அரசின்  அங்கீகாரம் மேன்மேலும் பல புதிய வாய்ப்புகளை, அங்கீகாரத்திற்கான வாசல்களைத் திறந்துவிட்டன.
ஆனால் அந்த வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா? என்று பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
நான்காண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் நிதிஉதவி ரூ.76 கோடியே 36 லட்சத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவானது. அதன் குறிக்கோள்களாகச் சொல்லப்பட்டவை இவை தாம்;
தமிழ்மொழியின் அரிய பொக்கிஷங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் உள்ளிட்ட பதினென்கீழ்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை... உள்ளிட்ட 41 செம்மொழி இலக்கியங்களைப் பதிப்பது, பாதுகாப்பது, அதன் பண்டை மரபு செழுமைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. இது தவிர மொழி சார்ந்த பற்பல ஆய்வுகளை ஊக்கப்படுத்துவது, இதன்மூலம் தமிழ்மொழியின் தனித்தன்மைகளை சாத்தியப்படுத்துவது. இந்த லட்சியங்கள் தற்போது எந்த நிலைமையை எட்டியுள்ளன என்று பார்க்கும் போது ஏற்படும் ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை.
முதலாவதாக பழைய தலைமைச் செயலகத்தில் செயல்பட்ட 40,000 அரிய புத்தகங்களையும், முக்கியமான Dvd, Vcdகளையும், பழந்தமிழ் இதழ்களையும் கொண்ட நூலகம் புதிய தலைமைச் செயலக இருட்டறையில் யாருக்கும் பயன்படாத வண்ணம் 10 மாதங்களாகப் பாதுகாப்பற்றுக் கிடக்கிறது.
அடுத்ததாக அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ் அறிஞரான இதன் துணைத்தலைவர் .செ.குழந்தைசாமி மற்றும் ஐம்பெருங்குடி அங்கத்தினர்களான அறிஞர் அவ்வை நடராஜன், விஞ்ஞானத் தமிழுக்கு வித்திட்ட மணவை முஸ்தபா, ஜெயகாந்தன் போன்ற அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது...
இதோடு இந்தச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் நான்காண்டுகளுக்கு மேலாக தமிழ்மொழிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் சுமார் 100 பேரை இப்போதும் நாட்கூலிகளாக நடத்தி, முறையாக பணி நியமனம் செய்யாதது...
நல்ல பல ஆன்மீகப் பணிகளைத் தொலைநோக்கோடு உருவாக்கிச் செயல்படுத்தத் தலைப்பட்டுள்ள தமிழக முதல்வர் தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளுக்குக் கட்டாயம் செவி மடுப்பார் என்று நம்புவோமாக!
ஆனால் இந்த விவகாரத்தை அரசியல்ரீதியாக  அணுகுவதைத் தவிர்த்து அதற்கு அப்பாற்பட்ட தொலைநோக்குப் பார்வையோடு அணுகவேண்டிய பொறுப்பு செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தற்போதைய தலைவர் தமிழக முதல்வருக்கு உள்ளது.
நம் தமிழக முதல்வர் நிச்சயம் தமிழ்மொழிக்கு எதிரானவரல்ல, பண்டை இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை வாசிக்கும் வழக்கம் உள்ளவர் தான்! அவரே சில நூல்களைப் படைத்துமுள்ளார். அப்படிப்பட்டவருக்கு இந்த விவகாரம் உரிய முறையில் கவனப்படுத்தப்படாமல் போயிருக்கலாம்!
தற்போதைய தமிழக அரசு தமிழ்மொழிக்கு எதிரானதோ என்ற பழியோ சந்தேகமோ கூட யாருக்கும் உருவாகாத வண்ணம் நிலைமை சீரடையவேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்!
அதற்கு செம்மொழி தமிழ் உயராய்வு மையத்திற்கான சிறப்பான தனி அலுவலகம், நூலகம் போன்றவற்றை மீண்டும் ஏற்படுத்துவது, அதன் நோக்கங்கள் நிறைவேற புதிய ஆய்வுகளையும், ஆக்கங்களையும் ஊக்கப்படுத்துவது, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களை அரவணைப்பது, அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் நிரந்தரப்பணி வழங்குவது!

3.4.2012

No comments: