Thursday, May 2, 2013

புதுமதுக்கடைகளும், போராடும் தாய்க்குலமும்!



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு இணையாக தற்போது நூற்றுக்கணக்கான இடங்களில் பெண்கள் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை எதிர்த்து போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தீர்ப்பும், டாஸ்மாக் நிர்வாகத்தின் உதாசினமும் பெண்களுக்கு போராடும் உத்வேகத்தை வழங்கியுள்ளது.

பா.ம.க வழக்கறிஞர் கே.பாலு உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், "தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சாலை விபத்துகளுக்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளே காரணம். எனவே அதனை மார்ச் 31க்குள் இழுத்துமூடவேண்டும் என ஆணையிட்டது" உயர்நீதிமன்றம்.

இந்தவகையில் இழுத்து மூடவேண்டிய கடைகளின் எண்ணிக்கை 862. எனவே, கடைகளின் இடங்களை மாற்ற கால அவகாசம் கேட்டது தமிழக அரசு. ஆனால் நீதிபதிகள் கறாராக மறுத்துவிட்டனர். ஏனெனில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் தரவேண்டிய விலை என்பது மனித உயிர்களல்லவா.....?

இந்தத் தீர்ப்பு தமிழகத் தாய்குலங்களின் பேராதரவைப் பெற்றது!இதனையடுத்து டாஸ்மார்க் நிர்வாகம் அவசர அவசரமாக புதிய கடைகளைத் திறக்க ஆயுத்தமானது. இதில் இது வரை 340இடங்களில் புதுக்கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

ஆனால், 'டாஸ்மாக்' புதுக்கடைகள் திறக்குமிடங்களெல்லாம் தற்போது போராட்டக் களங்களாகிவிட்டது.

காரணம் : குடியிருப்புவளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தளங்கள்.... எனவே இங்கே திறக்காதே என மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுகின்றனர். இதில் 90%க்கும் மேற்பட்டோர் பெண்களே!

எந்த அரசியல்கட்சிகளின் தயவையும் நாடாமல், தன்முனைப்புடன் தங்கள் வாழ்க்கைகான போராட்டமாக பெண்கள் களம் இறங்கியுள்ளதைக் காணமுடிகிறது.
மதுவுக்கு எதிராக தமிழகத்தில் இது வரை குரல்கொடுத்து வந்த கட்சிகள் எல்லாம் இந்த போராட்டக் களத்தில் காணாமல் போய்விட்டன.

போராடும் பெண்களோடு சிற்சில சிறிய இயக்கங்கள், தனிப்பட்ட சமூக ஆர்வலர்களே களத்தில் காணப்படுகின்றனர்.

மதுவுக்கு எதிராக மாநாடு நடத்தியவர்கள், பாதயாத்திரை கண்டவர்கள், மேடையேறிகர்ஜித்தவர்கள் மக்களுக்கு களத்தில் கைகொடுத்திருக்க வேண்டாமா?

சமீபத்தில் சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்பேசும் போது 
"மதுவிலக்கு வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதாவிற்குத்தான் அதிக அக்கறை உள்ளது. ஆனால், அது நடைமுறைசாத்தியமில்லையே" என்றார்.
நல்லது. முதல்வர் அவர்களுக்கு மதுவிலக்கில் அதிக அக்கறை இருக்கிறது எனும் போது சாத்தியமில்லாத மதுவிலக்கை தள்ளிவைத்துவிட்டு, சாத்தியப்படகூடிய மதுகட்டுப்பாடு அம்சங்களை செயல்படுத்துவதானே அவரது எண்ணத்திற்கு வலுசேர்க்கும்.

உயர்நீதிமன்றம் அகற்றக் கோரியத்திற்கு மாற்றாக புதிய கடைகளை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திறப்பது ஆட்சிக்கு அவப்பெயரை அல்லவா ஏற்படுத்தும்? புதிய மதுக்கடைகளை தவிர்க்கலாமே!

மதுவால் அரசுக்கு ஏற்படும் வருமானம் கண்ணுக்கு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஆனால் மதுவால் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்படும் இழப்புகள் அதை விட அதிகம் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதே இல்லை...!

சாலைவிபத்துகள், மதுவால் உண்டாகும் நோய்கள் போன்றவற்றிக்கான இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவச்செலவுகள் கொஞ்சமா?நஞ்சமா?

கொலைகள், தற்கொலைகள், திருட்டு, வழிப்பறி, பாலியல்வன்முறை என மதுவின் தீமையால் ஏற்படும் மட்டுமீறிய சமூக விளைவுகளால் காவல்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் மீதான பணிச்சுமைகளும், பணிழப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட்டால்.... மதுவால் அரசாங்கம் பெறுவதைக் காட்டிலும் இழப்பதே அதிகம் அதுவும் ஈடுகட்ட முடியாத இழப்புகளாகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
02-4-2013

No comments: