Thursday, May 2, 2013

இந்தியா VSஇத்தாலி

                                                                                                                         -Savithrikannan

இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலியக் கடற்படை வீரர் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அதைத்தொடர்ந்த பல நிகழ்வுகளும் பற்பல படிப்பினைகளை தருகின்றன.

இந்த நிகழ்வு இரு நாட்டு அரசாங்கங்களிடையே கடுமையான மோதலை, மன உலைச்சலை உருவாக்கியுள்ளது.

சர்வதேச சமூகமே இதை உற்று நோக்குகிறது. ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டுக் கொள்கையை இதில் பின்பற்றவேண்டும்" என்ற அறிவுரைகள் இந்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 15, 2012ல் இந்தச்சம்பவம் நடந்தது.

20.5 கடற்கல் தொலைவில் நடந்த இச்சம்பவம் இந்திய எல்லைக்குள் வருகிறது என்பது இந்திய அரசின் கூற்று. சர்வதேச பகுதி என்பது இத்தாலி அரசின் வாதம்.

சம்பவத்தில் இறந்த இரு மனீவர்களில் ஒருவர் தமிழ்நாட்டுக்காரர் மற்றவர் கேரளத்துக்காரர். தமிழக அரசோ இதை பொருட்படுத்தவில்லை.இது வரை பகீரத பிரயத்தனங்களை செய்கிறது. தன் அதிகார எல்லைகளையும் மீறி!

முதலாவதாக இந்த வழக்கை மாநில அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் வைத்து நடத்தியதை நமது உச்சநீதிமன்றமே ஏற்க மறுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசும், கேரளஅரசும் முறையே ஐந்து லட்சம் நஷ்ட ஈடு தந்தன என்றாலும், கேரள அரசு இறந்த மீனவரின் மனைவிக்கு அரசாங்க வேலை தந்து உதவியுள்ளது.

சம்பவத்திற்கு பிறகான பற்பல சமாதான முயற்சிகளில் இத்தாலி அரசின் நீதித்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரடியாக டெல்லி வந்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். ஆனால் டெல்லியில் உயர்மட்டங்களில் உள்ள கேரளா அதிகாரிகளின் பலமான 'லாபி' எந்த சமாதானத்தையும் ஏற்கவில்லை என்று பேசப்படுகிறது.

105நாட்கள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு தலா ஒரு கோடி பிணையில் விடுவிக்கப்பட்ட இத்தாலிய வீரர்கள் கேரளாவிலே தங்கி தினசரி கமிஷனர் ஆபிசில் ஆஜராகுமாறு அலைகழிக்கப்பட்டது இத்தாலி அரசிடமும், மக்களிடமும் கவலையை ஏற்படுத்தியது!
இந்நிலையில் இத்தாலி செய்த ஒரு இமாலயத் தவறுதான் பெரும் பின்னடைவை இந்த வழக்கிற்கு உருவாக்கியது.

அரசின் கவனத்திற்கோ, நீதிமன்றத்தின் கவனத்திற்கோ வராமல் இறந்த மீனவர்களின் குடும்பத்திடம் தலா ரூ ஒரு கோடி தந்து இத்தாலி அரசு பேரம் நடத்தியது இந்திய உச்சநீதிமனறத்தை கோபப்படுத்திவிட்டது. அப்போது தான் இந்தியாவின் தன்மானத்திற்கான சவாலாக இந்நிகழ்வு மாறிப்போனது.

இதன்பிறகு இத்தாலியின் டேரண்டோ நகரமேயர் இப்போசியோ ஸ்டேபானோ இறந்த மீனவர்களின் குழந்தைகளை தங்கள் நாட்டில் படிக்க வைக்க தெரிவித்த விருப்பமெல்லாம் பொருட்படுத்தப்படாமல் போனது.
இந்த வழக்கை பொறுத்தவரை இந்திய அரசு சட்டபூர்வமாக அணுகுவதையும், எளிய மீனவர்களின் குடும்பத்திற்கான நீதியை நிலைநாட்ட முயற்சிப்பதையும் நாம் குறைசொல்ல முடியாது.

அதே சமயம் சம்பவம் நடந்து 13 மாதங்கள் ஆன நிலையில் இந்த வழக்கிற்கான சிறப்பு நீதிம்னறமே இனிமேல் தான் அமைக்கப்படவுள்ளது. இந்த விசாரணை பல ஆண்டுகளை கடக்கலாம்.... என்பதெல்லாம் இந்திய அரசு நிர்வாகம், இந்திய நீதித்துறை போன்றவையின் வழக்கமான அதீத காலதாமதத்தின் அடையாளங்களாகும்.
இரு மீனவர்களின் சாவு இரு நாட்டு அரசாங்கத்திற்கிடையிலான ராஜீய உறவுகளுக்கு சாவுமணி அடித்துவிடலாகாது.

இறந்த இரு மீனவர்களும் கத்தோலிக்கர்கள் என்ற வகையில் வாடிகனின் கத்தோலிக்கத் தலைமை, "நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது எனினும் இதில் வெறுப்பும், துவேஷமும் வளராமல் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும்" என அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் சொல்கின்றன.

இச்சம்பவத்தின் பின்ணணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா இருப்பதான குற்றசாட்டுகள் கேரள சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்தன. அவதூறுகள், அரசியல் உள்நோக்கங்கள் கற்பிக்கப்பட்டன.
பிணங்களின் மீதான அரசியல் மிகவும் துரதிருஷ்டவசமானது.
நடந்தவற்றில் இருந்து பாடம் பெற்று, விரைந்து இப்பிரச்சினைக்கு முடிவுகாணவேண்டும்.


No comments: