Thursday, May 2, 2013

தொடரும் ரயில் விபத்துகள்



                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

உயில் எழுதிவைத்துவிட்டு இனி ரயில் பயணங்கள் மேற்கொள்வது நல்லது. 
அரக்கோண ரயில் விபத்து அலட்சியத்தின் உச்சம்...!

குறிப்பிட்ட ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் ரயில்விபத்துகள் நிகழ்கிறதென்றால் ரயில்வேத்துறைக்கு மனித உயிர்கள் குறித்து மதிப்பில்லை என்பதே அர்த்தம்.

1950முதல் 1980வரை அபூர்வமாகச் சில விபத்துகள் நிகழ்ந்தன.
1980களில் ரயில்விபத்துகள் அவ்வப்போது நிகழத்தொடங்கின....
1990களில் ரயில்விபத்துகள், அடிக்கடி நிகழ்வாக மாறின...
2000த்திலிருந்து ரயில் பயணங்கள் என்பவை ஆபத்து நிகழக்கூடிய சாகஸப் பயணங்களாகிவிட்டன, ரயிலில் ஏறி உட்கார்ந்தால் உயிரோடு ஊர்போய்ச் சேருவதற்கு உத்திரவாதமில்லை என்றாகிவிட்டது.

பொறுப்பின்மை, அதீத அலட்சியம், பழுதான இயந்திரங்கள், பராமரிப்பில்லாத மின் இணைப்புகள், கட்டுப்பாடற்ற வேகம், சிக்னல்களைப் பொருட்படுத்தாத ரயில் இயக்கம், சில சமயம் போதையில் ரயிலை இயக்கும் டிரைவர்கள்... என பற்பல காரணிகளைக் கொண்டுள்ளது ரயில்வே விபத்துகள்!
இத்துடன் ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து நிவர்திக்காததே ரயில்கள் தண்டவாளத்திலிருந்து தடம்புரளக் காரணமாகின்றன. இவ்விதம் நூற்றுக்கணக்கான விபத்துகள் ஆண்டு தோறும் நிகழ்கின்றன.

இவை தவிர, ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளால் ஆண்டுதோறும் நடக்கும் விபத்துகளில் மரணிப்போர் எண்ணிக்கை மட்டுமே 15,000! 
இவற்றில் ஆளை நியமிக்கலாம். இல்லை தானியங்களை நிறுவி நவீனப்படுத்தலாம்! இது சாத்தியப்பட்டாலே 40% விபத்துகள் குறையும்! 

மனிதர்களின் அலட்சியம் இயந்திரக்கோளாறு இரண்டும் இணையும் போது நடப்பவை விபத்துகள் எனப் பெயிரிடப்பட்டாலும் மற்றொரு வகையில் படுகொலைகளே!
ஏனெனில் ரயில்வேயின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனில் கோத்கர் கமிட்டி, சாம்பிரிட்டோ கமிட்டி பரிந்துரைகளையெல்லாம் பரணை மீது வீசியெறிந்துவிட்டு, 'ஆனது ஆகட்டும்...' என்று தொடர்ந்து அலட்சியப்படுத்தும் அரசாங்த்தின் கீழ் வாழும் மக்களே நாம்! 

அதிவேக ரயில்களை இயக்கும் ஐரோப்பிய நாடுகளில் ரயில்வே விபத்துகள் மிக்குறைவாக உள்ளன. நமது நாட்டில் பாதுகாப்பான பயணத்தை உத்திவாதப்படுத்த தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ரயில்வே பாதுகாப்பு நிதியம் அமைக்கவேண்டும் என்று அவ்வப்போது பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு மறக்கப்பட்டு வருகிறது.

பணியாளர்கள் பலமில்லாத ஒரு ரயில்வே பாதுகாப்பு படை, அதற்கு ஆளுமைத்திறன் போதாத தலைமை - இது தான் இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய பின்னடைவாகும்.

முன்பெல்லாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ரயிலும் பயணப்படுவதற்கு முன்பு முழுமையாக பரிசோதனைசெய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டே புறப்படும். இன்றைய நிலைமை அப்படியில்லை! இதற்கு என்ன காரணம்?

எத்தனை சாவுகள் நிகழ்ந்தாலும் சலனமேயில்லாத இதயத்தைக் கொண்டவர்கள் நிர்வாகத் தலைமையில் இருப்பது தான்! 

ஒவ்வொரு விபத்துக்கும் பின்னுள்ள காரணங்கள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கறராக - சமரசமின்றி - தண்டனைக்குள்ளாகப்படுவார்களேயானால் பெருமளவு விபத்துகள் குறைய வாய்ப்பண்டு.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
10-4-2013

No comments: