Thursday, May 2, 2013

தடுமாறும் தலைமை பீடங்கள்


  
                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

இந்தியாவையே அதிரவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல புதிய திருப்பங்கள், தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடி ஊழல் விவகாரம் தனி ஒருவரால் மட்டும் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இதில் தங்கள் கட்சி மட்டுமே குறிவைக்கப்படுவது அநியாயம் என தி.மு.க கருதுகிறது.

எவ்வளவு பெரிய ஊழலையும் காங்கிரஸ் அரசு காணாமல் செய்துவிடக் கூடிய ஆற்றல் பெற்றது என்பது கடந்த காலத்தில் மாட்டுதீவின ஊழல் லாலுபிரசாத்யாதவ் தொடங்கி இன்றைய பகுஜன் சமாஜ்கட்சி தலைவி மாயாவதியின் சொத்துகுவிப்பு வழக்கு வரை நிருபிக்கப்பட்ட உண்மையாகும்!
அப்படி இருக்க தி.மு.கவைக் காப்பாற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை. இந்த தீராத மனவருத்தமும், கோபமுமே தி.மு.க - காங்கிரஸ் உறவு முறிவுக்கான முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் தி.மு.கவை அடிபணியவைக்கும் அஸ்திரங்களை ஒவ்வொன்றாக காங்கிரஸ் பிரயோகிக்கத் தொடங்கி உள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்றக் கூட்டுக்குழிவின் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க விரும்பி ஆ.ராஜா பி.சி.சாக்கோவுக்கும் சபாநாயகர், மீராகுமாரிக்கும் கடிதம் எழுதினார்.

'ஆனால் எழுத்துமூலமான பதிலே போதுமானது' என பி.சி.சாக்கோ மறுத்துவிட்டார்.

ஆட்டர்னி ஜெனரல் வாகவைதி அளித்த வாக்குமூலத்தில் ஆ.ராசாவின் மீதான கடும் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டுள்ளன.

இத்துடன் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தயராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நெருக்கடிமிக்க சூழலில் தி.மு.கவும் எப்பாடுபட்டாவது தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

ஆ.ராசா தற்போது ஆவேச ராசாவாக மாறி வருகிறார்!
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்த்தில் பிரதமரிடம் பல முறை கலந்து பேசியதையும், கடிதங்கள் எழுதியதையும் அம்பலப்படுத்தி உள்ளார்.

அத்துடன் அன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர் குழுவின் தலைவர் பிரணாப்முகர்ஜியையும், அட்டர்னி ஜெனரல் வாகனவைதியையும் கூட ராசா விட்டுவைக்கவில்லை.

நாடாளுமன்றக் கூட்டுகுழுவின் விசாரணைநோக்கத்தை, அதன் நம்பகத்தன்மையை ஆ.ராசா கேள்விக்களாக்கியுள்ளார்.

இவை அனைத்தையும் பார்த்தும், கேட்டும், படித்தும் வருகின்ற மக்கள் இந்த நாட்டின் அரசமைப்புகளின் மீதான நம்பிக்கையை மெல்ல, மெல்ல இழந்து வருகின்றனர்.

அரசாங்கம், பாராளுமன்றம், விசாரணை அமைப்புகள், நீதிமன்றம், பிரதமர், ஜனாதிபதி... என மதிப்பு மிக்க மையங்களின் மரியாதைகள் சிதைவது நாட்டுக்கு நல்லதல்ல, எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. கோடானுகோடி மனிதர்கள் தங்கள் சொந்த உழைப்பை நம்பி எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டில் அவர்களுக்கான தலைமைகள் பின்பற்றதக்கதாக இல்லை என்பது பெரிய துரதிர்ஷ்டமே! 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
27-3-2013

No comments: