Friday, May 24, 2013

நிதிநிலை அறிக்கை நிலையில்லா வாழ்க்கை



 சாதாரண மக்களின் தேவைகள் குறித்து சர்வ வல்லமை கொண்ட ஒரு அரசாங்கம் எந்த அளவிற்க்கு அறிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அதன் நிதிநிலை அறிக்கையே அத்தாட்சியாகும்.
இந்தியா என்ற 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையில் அரசின் மொத்த செலவு ரூ 14,90,925 கோடி என்பது வியப்பல்ல.
ஆனால் அரசுக்கு வருமானமோ 10,77,312கோடிதான்!
அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு முழுமையாக நிதி ஒதுக்கினாலே கூட அது முழுமையாக நிறைவேறிவிடும் என்று சொல்லமுடியாத ஒரு நாட்டில் இவ்வளவு பற்றாக்குறை இருக்குமென்றால் பல திட்டங்கள் ஏட்டளவிலேயே நின்றுவிடும், மற்றும் பல அரைகுறையாக அமல்படுத்தப்படும் என்பது நாம் ஏற்கெனவே பெற்ற அனுபவங்கள் தான்!
கார்பரேட் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடிக்குமேல் வரிச்சலுகைகள் வழங்கி, புதிய எக்னாமிக் ஜோன்களை ஊக்குவிக்கும் அரசு, மனிதவளம் அதிகமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு, குறுந்தொழில்களுக்கு ஒதுக்கியதோ வெறும் 5,000 கோடி தான்!
விவசாய கடன் இலக்கு 5.75 லட்சம் கோடி என்பது கேட்பதற்கு இனிக்கிறது. ஆனால் இதில் 90% விவசாயத்தின் பெயரால் பெரும் பணக்காரர்களுக்கும், வசதி படைத்தோருக்குமே போய்ச்சேருகிறது. இதனால் தான் ஆண்டுக்காண்டு விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கின்றன.
வழக்கம்போல உணவு, உரம், பெட்ரோலியத்திற்கு அதிக மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு, உரம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஊழல், ஊதாரித்தனம், பொறுப்பின்மை அகற்றப்பட வேண்டுமேயல்லாது ஆண்டுக்காண்டு மானியத்தை அதிகப்படுத்துவதில் பயனில்லை.
ஆண்டுக்காண்டு இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு கேள்வி முறையில்லாமல் பிரம்மாண்டமாக உயர்கிறது. இந்த பட்ஜெட் இராணுவத்திற்கு 1,93,407 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் இருளில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்தியாவை ஒளிர வைக்கும் மின் தேவைக்கோ வெறும் 10,000கோடி தான்!
இதே போல் கல்வி, மருத்துவம் இரண்டிற்குமே மிகக்குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, இந்த இரு துறைகளிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதையே அரசு விளங்கிக் கொள்ளவில்லை.
உதாரணத்திற்கு 6,000 புதிய பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என்கிறது அறிக்கை. ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் இலட்சக்கணக்கில் நிரப்பப்படாமல் ஆண்டுக்காண்டு இருக்கும் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு வருவதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள்..?
பள்ளி கல்வி கட்டணத்திற்கு சேவை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. வியாபாரமாகிவிட்ட கல்வித்துறைக்கு ஏன் விதிவிலக்களிக்க வேண்டும்..?
இதனால் பலனடையப் போவது பெற்றோர்களல்ல.
இதே போல் சேவை நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவ மனைகளுக்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களை சேவை நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டு இந்த பலனை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட், பீடி, புகையிலைக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதே இம் முறையும் நடந்துள்ளது. ஆனால் இந்த கூடுதல் வரிவிதிப்புகள் கூடுதல் வரி ஏய்ப்புகளுக்கு வழி வகுத்து, இருக்கும் வருமானத்தையும் அரசு இழந்துவருவதே நடைமுறையாயுள்ளது.
பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை இலக்கு 30,000 கோடியாம்! இது இருக்கும் வீட்டை இழப்பதற்கு ஒப்பாகும்! இனி புதிய பொதுத்துறை  நிறுவனங்கள் வரப்போவதில்லை. லாபகரமாக இயங்கும் நிறுவனங்களையாவது விட்டு வைக்கக் கூடாதா?
மாத ஊதியம் பெறுவோருக்கு ஆண்டு வருமானம் 2 லட்சம் வரை என விரிவிலக்கு தரப்பட்டுள்ளது. நடைமுறையில் தினக்கூலி பெறுவோர்களே ரூ300 முதல் 800 வரை நாளொன்றுக்கு சம்பாதிக்கும் காலத்தில் இதை 5லட்சம் வரை அதிகரிக்க வேண்டும் என்ற நடுத்தர மக்களின் குரலை அரசுகாதில் போட்டுக் கொள்ளவேயில்லை.
மொத்தத்தில் இந்த பட்ஜெட், இப்போதும் கூட இந்திய அரசு மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதையே அறிவிக்கிறது.

No comments: