Friday, May 24, 2013

அகிலேஷ்யாதவும், அரசியல் கிரிமினல்களும்




இன்றைய தினம் இந்திய மக்களின் ஒட்டுமொத்த கவனமும் அந்த இளைஞரின் மீது தான் கவிந்திருக்கிறது. வாரிசு அரசியல் என்ற வக்கிர அரசியல் பாதையில் வந்தவர்தான் ஆயினும், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேச முதல்வராக பதவி ஏற்றுள்ள அகிலேஷ்யாதவ் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதில் வியப்பில்லை!
வசீகரமான தோற்றம்! வயதோ 38தான்! இந்தியாவில் மட்டுமல்லஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தில் உயர்கல்வி கற்றவர்.
ஆக, படித்தவர், பண்பாளர், சுற்றுச்சூழலியலாளரும் கூட! பெரிய இடத்துப் பிள்ளை யென்றில்லாமல் அனைவருடன் கலந்து பழகும் குணம், கிராமங்கள், சிற்றூர்கள் என சைக்கிளில் சுற்றி மக்களையும், கட்சிக்காரர்களையும் கவர்ந்தவிதம், ..டி, .பி.எம் போன்ற உயர்கல்வி கற்ற இளைஞர்கள் பலரின் நட்பும், ஆலோசனைகளும் பெற்று வருபவர், கடைசிவரை தன்னை வருங்கால முதல்வராக முன்னிலை படுத்தப்பட்டதை தவிர்த்து அரசியல் செய்த பாங்கு... என அகிலேஷ் யாதவ் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி தான்!
இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் பன்மடங்கு கூடியுள்ளன.
அதுவும் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்களைக் கொண்ட-சாதி, மத அரசியல் சகதியில் கட்டுண்டு தேங்கிக்கிடந்த- ஒரு மாநிலத்தில், காலத்தின் தேவையாக அகிலேஷ் யாதவ் பார்க்கப்படுவதில் வியப்பில்லை!
முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள அவர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
முதலில் சமாஜ்வாதி கட்சி என்றாலே அது குண்டர்கள், ரவுடிகள் மலிந்த கட்சி என்று மக்கள் மனதில் பதிந்துள்ள பிம்பத்தை அவர் மாற்ற வேண்டும்.
சமாஜ்வாதி கட்சியின் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு மாநிலத்தில் கட்சிக்காரர்கள் அதை குண்டுவெடித்து கொண்டாடியதும், அதில் சில உயிர்பலிகள் நேர்ந்ததும், மாற்றுக்கட்சிக்காரர்கள், மாற்று ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதும், அவர்களின் வீடுகள் தரை மட்டமாக்கப் பட்டதும், இதை தடுத்த போலீசாருக்கே அடி உதை விழுந்ததும், அவலத்தின் உச்சகட்டமாக அகிலேஷ் யாதவ் முதல்வரானவுடன், ஜெயிலில் இருக்கும் குண்டர்கள், சிறை அதிகாரிகளைத் தாக்கியதும் ஓட்டுப்போட்ட மக்களை கலவரப்படுத்தியுள்ளன.
.பியில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் கிட்டதட்ட சரிபாதியினர் கிரிமினல் வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் என்பதும், அதிலும் சமாஜ்வாடி கட்சியினரே பெருமளவினர் என்பதும் கவலைக்குரிய அம்சங்களே!
அகிலேஷ்யாதவின் அமைச்சரவையிலே இப்படிப்பட்டவர்கள் இடம் பெற்றிருப்பதும், அதுவும் ஆள்கடத்தல், கொலைமுயற்சி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புள்ளவரும், எட்டு கிரிமினல் வழக்குகளில் பதிவாகி ஏற்கெனவே பொடாவில் சிறைவாசம் சென்றவருமான ராஜன்பையா என்பவருக்கு தற்போது தரப்பட்டுள்ள முக்கியத்துவமும் அனைத்து மீடியாக்களிலும் கடும் விமர்சனத்திற்கு குள்ளாக்கப்பட்டுள்ளது.
இதனால் நாம் அவசரப்பட்டு அவநம்பிக்கை கொள்ளவேண்டியதில்லை!
இந்தச் சூழல்கள் தலைகீழாக ஒரே நாளில் மாறிவிடாது. மாற்றவும் முடியாது.
இவை தான் இது நாள் வரையிலான அம்மாநிலத்தின் அரசியல் அடையாளங்கள்...!
இளைஞரான அகிலேஷ்யாதவ் இப்போது தான் தலைமை ஏற்றுள்ளார். அவரைவிட வயதில் மூத்த பல அரசியல் தலைவர்களை எந்த அளவுக்கு அவர் கட்டுப்படுத்த முடியும்? தன் கனவுகளை, லட்சியங்களை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதிற்கு கால அவகாசம் தந்தே கணிக்க வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பேன், வறுமையை ஒழிப்பேன் ரவுடிகளின் ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்துவேன் என முதலமைச்சரானதும் முதல் பேட்டியில் கூறியுள்ளார். இவை வார்த்தை ஜாலங்களாக இருந்துவிடாமல், நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்ப்பார்ப்பு! இந்த நம்பிக்கைகள் நிஜமாகும் போது அவர் உத்திரபிரதேச அரசியலில் மாத்திரமல்ல, இந்திய அரசியலின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் வாய்ப்புண்டு.
15.3.2012

No comments: