Thursday, May 2, 2013

கூட்டுறவு சங்கத்தேர்தல்கள்


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

12 ஆண்டுகளாக நடக்காதிருந்த கூட்டுறவு தேர்தல்களின் முதல்கட்டம் இன்று நடந்துள்ளது.

இந்த தேர்தல்கள் ஐந்து நிலைகளில் நடக்கும். முதல் நிலையில் மட்டுமே நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏப்ரல் 5,12,19,27 ஆகிய தேதிகளில் முதல்நிலை நடந்து முடிந்தவுடன் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு அடுத்த நான்கு நிலைகளில் நடத்தப்படும். 
முதல்கட்டத் தேர்தலில் ஆங்காங்கே சில அராஜகங்கள் அரங்கேறியுள்ளன. கள்ள ஓட்டுகள், ஒரு புறம், மற்றொருபுறம் ஓட்டளிப்பதற்கே தடை போன்ற அராஜகங்கள்! இதனால் சாலைமறியல், போராட்டங்கள் நடந்துள்ளன.

சட்டசபையில் இது குறித்து பிரச்சினை எழுப்ப முயன்ற தே.மு.திக மற்றும் இடது சாரி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிதிலிருந்தே அராஜகங்கள் அரங்கேறுவது என்பது கடந்த 45ஆண்டுகளாகத் தமிழகம் கண்டுவரும் காட்சிகளே!
எந்தகட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக்கட்சியினர் சம்பந்தமில்லாத புதியவர்களை சங்கத்தில் புதிதாக சேர்ப்பார்கள்... உண்மையிலேயே அந்த சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர் சங்கத்தில் சேர முடியாமல் தடுப்பார்கள்.

அடுத்ததாக ஆளும்கட்சிக்காரர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், வெகுசில இடங்களில் தான் மாற்றுக் கட்சிக் காரர்களின் வேட்புமனு ஏற்கப்படும்.

இந்த வழிமுறைகளின் வழியாகவவே சுமார் 90% வெற்றியை தேர்தலுக்கு முன்பாகவே ஆளும்கட்சினர் அபகரித்துவிடுவார்கள்.

இந்த முறையும் இது தான் நடந்துள்ளது. முக்கிய எதிர்கட்சியான தி.மு.க தேர்தல் களத்திற்கே வர மறுத்துவிட்டது. இதனால் ஆளும் கட்சிக்கு மேலும் அனுகூலமாகிவிட்டது. இந்த நிலைமைகளில் தற்போது நடந்திருக்கவேண்டிய முதல்கட்டத்திற்கான 4,735 சங்களுக்கான தேர்தல்களில் 4325சங்களுக்கு போட்டியில்லாத நிலையில் ஆளும்கட்சி தரப்பினரே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ள சங்கங்களுக்கான தேர்தல்களில் தான் இன்றைக்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் அரியலூர், கோவை, தேனி, தருமபுரி, ஜித்தண்டஹள்ளி, திருவள்ளுர் பெரியராமபுரம், திருத்தணி... போன்ற இடங்களில் நடந்துள்ளன.
இவ்வளவு அராஜகங்கள் கூட்டுறவு சங்கத்தேர்தல்களில் நடப்பதற்கு என்ன காரணம்....?

கூட்டுறவு என்பது கைத்தறி, பால்வளம், மீன்வளம், வீட்டுவசதி, வேளாண்மை, கதர்கிராமத் தொழில்..... என 14 துறைகளுக்கானது. இந்தத்துறையில் பணியாற்றுபவர்கள் தங்கள் சொந்த பணத்தை மட்டுமே மூலதனமாக வைத்து கூட்டுறவு முறையில் உழைத்து, அதன்மூலம் வரும லாபத்தை அவரவர் உழைப்பிற்கேற்ப பங்கிட்டு கொண்ட காலகட்டங்களில் கூட்டுறவு தேர்தல்களில் பிரச்சினை எழவில்லை. நேர்மையான, திறமையான, பொதுநலக் கண்ணோட்டமுள்ளவர்களை உறுப்பினர்கள் தங்களுக்குள் கண்டு தேர்ந்தெடுத்தனர். இந்தக்காலகட்டங்களில் கூட்டுறவு துறையால் மக்கள் அடைந்த நன்மைகள் கணக்கில் அடங்காது!

எப்போது அரசாங்கம் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியங்கள் தரத் தொடங்கினவோ, வாங்கிய கடன்களை ஓட்டு அரசியலுக்கு ரத்து செய்ய ஆரம்பித்ததோ அப்போது முதல் இந்த அனுகூலங்களை அனுபவிப்பதற்காகவென்றே கூட்டுறவுகளுக்கு தொடர்பில்லாத அரசியல் சக்திகள் கூட்டுறவை ஆக்கிரமித்துவருகின்றன.

கூட்டுறவு என்றால் கூட்டுக் கொள்ளை என்பது இன்றைய புரிதலாகிவிட்டது.

கூட்டுறவு என்ற இயக்கம் முழுக்க, முழக்க மக்கள்சக்தியைக் கொண்டு இயங்கும் பட்சத்தில் - அதில் அரசாங்கங்களின் நிதியுதவி அறவே தவிர்க்கப்படும் பட்சத்தில் - மட்டுமே அதன் லட்சிய நோக்கத்தை நிவைவேற்ற இயலும். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
05-4-2013

No comments: