Thursday, May 2, 2013

வாரா வங்கிக் கடன்கள்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

வங்கிகளை தேசியமயமாக்கினார் இந்திராகாந்தி

தனியார் வங்கிகளின் மோசடிகளை தடுக்க, ஏழைகளும் வங்கிகளின் பலனைப் பெற இத்திட்டம் உதவும் என வரவேற்க்ப்பட்டது.

ஆனால், நடைமுறையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் நிறுவனங்கள் மோசடி செய்யவும், ஏழைகளுக்கு கடன் என்பது எட்டாகனியாகிக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டிருக்கிறது.

வங்கிகளின் வாராக்கடன் என்பது 2012ல் 26,629கோடியாக இருந்தது. இது 2011- மார்ச்சில் 71,080கோடியாக ஏறியது. 2011டிசம்பரில் இது ஒன்றரை லட்சம் கோடியானது. தற்போது இரண்டுலட்சம் கோடியை தாண்டிவிட்டது.

இதில் பெரிய நிறுவனங்களும், செல்வாக்கான நபர்களும் பெற்றுள்ள கடன்களே அதிகமாகும்.

2010-11 காலகட்டத்தில் திரும்பவசூலிக்கமுடியாது என தள்ளுபடி செய்யப்பட்ட கடன் 23,365கோடியாகும்.

இந்தியாவில் ஏழைவிவசாயிகள் கந்துவட்டிக்கு பணம்வாங்கி கட்ட முடியாமல் தற்கொலைக்களாகும் சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. அதேசமயம் வங்கிகளில் பலகோடி கடன் பெற்று அதிகாரிகளை அலைகழித்து சுகமாக வாழும் பணக்காரத் தொழிலதிபர்களும் இருக்கின்றனர்.

கிங்பிஷர், சகாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன்களின் கதி என்னவானது என்பது அனைவருக்கும் தெரியும்.

உண்மையில் வங்கிக்கடன்களை முறையாகக் கட்டுபவர்களாக ஏழை எளிய மக்களும், நடுத்தர பிரிவினருமே உள்ளனர்.
மாணவர்களுக்காக வழங்கப்படும் கல்விக்கடன்கள் திரும்ப கட்டப்பட்டு விடுகின்றன. 2011ல் இந்தியன் வங்கி 1,20,000மாணவர்களுக்கு கடன் வழங்கியது. இதன் மொத்த மதிப்பே 900கோடிதான்! திரும்பபெறக்கூடிய இந்தக்கடன்களால் நாடும், வீடும் ஒரு சேரப் பயன்பெறும்

இதைப்போலவே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் பிரச்சினையில்லாமல் வசூலாகின்றன. சென்ற ஆண்டு 917கோடி வழங்கப்பட்டது. பலனடைந்த பெண்களோ லட்சத்திற்கு அதிகம்!

ஆனால், இந்த 2லட்சம் கோடியை 'ஸ்வாகா' செய்தவர்கள் - குறிப்பாக இதன் பெரும்பகுதியை அபகரித்த பெருநிறுவனங்களின் எண்ணிக்கை அதிக பட்சம் பத்தாயிரம் கூட இல்லை!

அரசியல் தலையீடுகள், ஊழல்அதிகாரிகள் கூட்டணியில் இவ்விதக் கொடுமைகள் அரங்கேறுகின்றன... என்பது உண்மை என்றாலும் ஏமாற்றுவதற்கென்றே வங்கி கடன் பெறும் எத்தர்களும் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் அரசு வங்கிகளை மட்டுமல்ல, தனியார் வங்கிகளைக் கூட விட்டு வைப்பதில்லை.

அதே சமயம் தனியார் வங்கிகளின் வாராக்கடன் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனோடு ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு தான்!

ஆகவே, வங்கிகடன் தருவதிலும், திரும்பப் பெறுவதிலும் தனியார் வங்கிகள் கையாளும் சில உத்திகளை பொதுத்துறை வங்கிகளும் கையாளவேண்டும்.

திரும்பத் தர மறுப்பவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களின் பிற சொத்துகளை ஜப்தி செய்து சிறையில் தள்ளவேண்டும்.... என்பதெல்லாம் சாதாரண மக்களின் விருப்பம்!
ஆனால், இது நிறைவேறுவது மிகமிக அபூர்வம்...! 

ஏனெனில் நாட்டின் பெரிய மனிதர்கள், பெருநிறுவனங்கள் அரசுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கியே இரண்டரைலட்சம் கோடியாகும்! 
இந்தத்தொகை இரண்டுவருட தமிழக பட்ஜெட்டிற்கு சமமாகும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
26-3-2013

No comments: