Wednesday, May 22, 2013

அரசியலாக்கப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்



ரயில் தடம் புரண்டுள்ளதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இந்திய வரலாற்றில் ஒரு ரயில்வே பட்ஜெட்டில் அரசியலே தடம் புரண்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தற்போது சமர்பித்துள்ள ரயில்வே பட்ஜெட்டைத் தொடர்ந்து திரிணாமுள் காங்கிரஸ் தலைவி மம்தா பானார்ஜியால் ஒரு அரசியல் சூறாவளி ஆரம்பித்துள்ளது.
பத்து ஆண்டுகளாக ரயில்வே பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. நிதி பற்றாக்குறையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன.
உதாரணத்திற்கு சென்ற ரயில்வே பட்ஜெட்டில் சுமார் 57,000 கோடிக்கு புதிய திட்ட அறிவிப்புகள் வெளியாயின. ஆனால் அறிவிக்கப்பட்டதில் 58% நிதியை மட்டுமே ரயில்வே அமைச்சகத்தால் திரட்டமுடிந்தது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தங்கள் மாநிலத்திற்கு பற்பல புதிய ரயில்களை, திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் அந்தந்த மாநில அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் சில ரயில்வே பட்ஜெட்டில் வெளியாவதும், அவை அம்போவெனக் கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
உதாரணத்திற்கு சென்ற பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட மூன்று புதிய ரயில்கள் அறிவிப்போடு நின்றுபோனது. கடந்த 50 ஆண்டுகளில் ரயில்வே பயணிகளின் எண்ணிக்கை 1,200 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் ரயில்பெட்டிகளோ 250 சதவிகிதமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது தேவையில் 80% த்தை நிறைவேற்ற முடியவில்லை.
மக்களின் எதிர்பார்ப்பிற்கும், ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாட்டு திறனுக்குமான இடைவெளியோ இட்டு நிரப்பமுடியாத அளவிற்கு உள்ளது.
நிதி பற்றாக்குறையால் ஏற்படும் நெருக்கடியால் ரயில்வே துறையால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை; பஸ் கட்டணங்களை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், சௌகரியங்கள் அதிகமாக உள்ளதாலும் தற்போது ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில் கட்டண உயர்வை அநியாயம் என்று சொல்ல முடியாது.
சாதாரண டிக்கெட்டிற்கு ஒரு கி.மீட்டருக்கு 2பைசாவும், ரிசர்வேஷன் செய்து படுக்கை வசதியுடன் பயணிப்போருக்கு ஐந்து பைசாவும், குளிர்சாதனபெட்டியில் பயணிப்போருக்கு இன்னும் சற்று அதிகமாகவும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த கட்டண அறிவிப்பால் கடும் அதிருப்திக்குள்ளான மம்தாபானார்ஜி தனது கட்சியைச் சார்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ÔÔகட்டண அறிவிப்பை வாபஸ்பெறவேண்டும் அல்லது அமைச்சர் பதவியை ராஜீனாமாச் செய்ய வேண்டும்’Õ என பொது மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஆனால் தினேஷ் திரிவேதியோ, அரசியலுக்காக, ரயில்வே துறையை பலியிடமுடியாது. எனக்கு நாட்டுநலன் தான் முக்கியம்... என தீர்க்கமாக பதிலளித்துள்ளார்.
தினேஷ் திரிவேதியை பொறுத்த அளவில் அவர் ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி, பூர்வீகம் குஜராத் என்றாலும் வங்கமண்ணில் வளர்ந்தவர். லஞ்ச, ஊழல்களை எதிர்த்து இடைவிடாத யுத்தம் நடத்தி கொண்டிருப்பவர். சிறந்த அறிவு ஜீவி, நல்ல நிர்வாகி, பத்துக்கும் மேற்பட்ட முக்கிய கமிட்டிகளில் பதவி வகிப்பவர். ஜனதாதள்ளில் ஆரம்பித்த அவரது அரசியல் பயணம் காங்கிரஸில் கால்பதித்து திரிணமுள் காங்கிரஸில் சங்கமமானது.
தற்போது திரிணமுள் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இடையிலான கருத்து வேறுபாடே ரயில்வே பட்ஜெட் வடிவில் ரணகளமாக்கப்பட்டுள்ளது. இதில் களபலியாகப்போவது ரயில்வே துறையா? தினேஷ் திரிவேதியா? மத்திய அரசா? அல்லது திரிணமுள் காங்கிரஸின் அரசியல் எதிர்காலமா? என்பதற்கு காலம் தான் விடை சொல்ல முடியும்.
ஒன்று மட்டும் நிச்சயம், இந் நிகழ்வு ஒரு நல்ல முன் மாதிரியல்ல...

14.3.2012
குறிப்பு : கடைசியில் தினேஷ் திரிவேதி அமைச்சர் பதவியை துறந்தார்.

No comments: