Friday, May 3, 2013

ஸ்டெர்லைட் ஆலை போராட்டங்கள்



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

இந்திய சுதந்திரப்போராட்ட காலக்கட்டத்தில் வ.உ.சி, சுப்பிரமணியசிவா தலைமையில் முதன்முதல் மக்கள் எழுச்சியைக் கண்ட நகரம் தூத்துக்குடி!

தற்போது அதே நகரம் போர்க்கோலம் பூண்டுள்ளது.

மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்துகின்றனர்.

ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருட்டாலைக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று, நேற்று ஆரம்பித்ததல்ல.

1994லிருந்து இந்தப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதலில் இந்த நிறுவனம் குஜராத்திலும், கோவாவிலும் அனுமதி மறுக்கப்பட்டது பிறகு,1989ல் மகாராஷ்டிராவில் காலூன்றி, 94ல் வெளியேற்றப்பட்டது, காரணம், அதனால் ஏற்படும் சுற்றுச்சுழல் பேரழிவுகளே...!

தற்போது ஏற்பட்டது போன்ற விஷவாயுக் கசிவு இதற்கு முன்பு ஜீலை 97லில் தொடங்கி பல முறை நிகழ்ந்துள்ளன. அந்த நேரங்களில் மக்கள் மூச்சுத்திணறி மயங்கி விழுவதும், கண்எரிச்சல், தொண்டை எரிச்சல் போன்றவற்றால் அவதிப்பட்டு கொதித்தெழுந்து போராடுவதும் கடந்த 15ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இதனால் கருவில் உள்ள சிசுக்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும், புற்றுநோய் உண்டான பதிவுகளும் கணிசமாக உள்ளன.
இந்த ஆலையைச் சுற்றிலும் 40கி.மீ தொலைவிலுள்ள வயல்வெளிகள், நீர்நிலைகள், மண்வளம் போன்றவை பாதிப்பகுக்குள்ளாகியுள்ளன.
மரங்கள், செடிகள் கருகியுள்ளன.

மொத்தத்தில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படத்துவங்கியதில் இருந்து ஏராளமான உடற்பிரச்சினைகள், மரணங்களை சந்தித்து வரும் தூத்துகுடி தற்போது மக்கள் வாழ இயலாத நரகமாக மாறிவருகிறது.
தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் எல்லா நிபந்தனைகளையும் இவ்வாலை தொடர்ந்து மீறி வருகிறது.

மிகவும் ஆபத்தான யுரேனியம், அர்சானிக், டன்பிஸ்மத், கந்தக அமிலம், ஆனோடை, பாஸ்பரஸ் போன்றவற்றை இவ்வாலை கையாள்கிறது. அதேசமயம் இந்த ஆலைக்கழிவுகளை முறையாக அகற்றுவதோ, அழிப்பதோ இல்லை.

மத்திய அரசின் நீரி அமைப்பின் அடிப்படையில் இவ்வாலை செயல்பட 1998 உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால் அடுத்த மாதமே அந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டு அகற்றி கொள்ளப்பட்டது தடை!
2004ல் உச்சநீதிமன்றக் குழுவின் ஆய்வறிக்கை பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டது.

இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான வழக்குகள் பதிவாகி உயர்அதிகாரிகளின் கைதும் நிகழ்ந்துள்ளன. ஸ்டெர்லைட் மக்கள் இயக்கம் பற்பல போராட்டங்களை நடத்தி வருகிறது ஆனபோதிலும், இந்த ஆலையை தமிழகத்திலிருந்து அகற்ற முடியவில்லை. அதற்கு இரண்டு காரணம்.

ஒன்று தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு பெரிய அரசியல்கட்சிகளின் ஆதரவு! தேசிய கட்சிகளின் ஆதரவு!மற்றொன்று, போராடுபவர்களோடு கலந்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சில அரசியல் தலைவர்கள்...!

'பணம் பாதாளம் வரை பாயும்' என்பது பழமொழி! இதை அனுபவபூர்வமாக பார்த்து வெதும்பி நிற்கின்றனர் தூத்துகுடிமக்கள்.
இதுபோன்ற ஒரு ஆலையை வளர்ந்த நாடுகளில் நிறுவமுடியாது. அங்கே நினைத்துப் பார்க்கவே முடியாது.

ஆனால் தலைமைகளால் இங்கே இது போன்ற சுற்றுச்சுழலை பாதிக்கும் ஆலைகள் சாத்தியப்பட்டு விடுகின்றன.

தூத்துகுடியில் ஸ்டெர்லைட், ஒரிசாவில் - வேதாந்தா, சத்திஸ்கரில் பால்கோ, கோவாவில் சேசேகோவா... என்று சுற்றுச்சுழல் அவலங்கள் தொடர்கிறது...!

சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்வதற்கு துன்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு, ஆன்மபலத்தை பெருக்கிக் கொள்வதற்கு இந்திய மக்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தங்களோ இவை!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
26-3-2013

No comments: