Friday, May 24, 2013

சரியும் சட்டமன்ற மாண்புகள்




சட்டமன்றங்களா? அல்லது பொழுது போக்கு மன்றங்களா? என்ற சந்தேகம் தான் மேலோங்குகிறது...?
குஜராத் பா.. சட்டமன்ற உறுப்பினர்களான சங்கர் சௌத்திரி, ஜெத்தா தார்வத் இருவரும் சட்டசபையில் பேடில் ஆபாச பெண்களின் படங்களை பார்த்த சம்பவம் தற்போது  பெரும் சர்ச்சைகுள்ளாகியுள்ளது. குஜராத் சட்டசபையில் பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் நீர்வளத்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த இரு எம்.எல்.ஏக்களும் ஆபாசப் படங்களை பார்த்ததைக் கண்டு நிருபர்கள் அதிர்ந்துள்ளனர்.
 இந்த சம்பவத்தின் நேரடி சாட்சியான மூத்தபத்திரிகையாளர் ஜானக் தாவ் இது பற்றிக் கூறும் போது, நாங்கள் பத்திரிகையாளர் பகுதியிலிருந்து பார்த்த போது முதலில் அவர்கள் விவேகானந்தர் படத்தையும் பிறகு கார்டூனையும் இறுதியாக பெண்களின் விதவிதமான காட்சிகளையும் கண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் சபாநாயகரிடம் புகார் தெரிவிக்க, அதன் பிறகும் அந்த நிகழ்வுகள் தொடர்ந்ததையடுத்து அவர்களின் ஐபேடை அகற்றும்படி சபாநாயகர் கட்டளையிட்டுள்ளார். இது சட்டசபையில் பெரும் சர்ச்சையாகி அரசும், கட்சித் தலைமையும் இதை அடியோடு மறுத்துள்ளன. இந்த மறுப்பு என்பது மழுப்பலே!
மிகச் சமீபத்தில் தான் கர்நாடக சட்டசபையில் இது போன்ற கண்றாவிக் காட்சிகளைக் கண்ட மூன்று பா.. அமைச்சர்கள் பதவி இழந்தனர். ஆம், பதவியை மட்டுமே இழந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது குஷியாக அதே போன்று சட்டசபைக்குள் நடந்துள்ளனர் குஜராத் எம்.எல்.ஏக்கள்! இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி - அதுவும் காதலர் தினம் கொண்டாடுவதையே கூட பண்பாட்டிற்கு இழுக்கு என்று பறைசாற்றிய கட்சி - தற்போது மக்கள் பரிகசிக்கத்த வகையில் அடுத்தடுத்து அவமானப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் பா..கவை மட்டும் சொல்லிவிட முடியாது என்ற வகையில் மற்ற பல கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் கர்நாட சம்பவ விசாரணையில் வெளிப்பட்டுள்ளன.
இந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுகேட்க வரும்போது உங்களுக்காக பாடுபட எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என மக்கள் காலில் விழுந்தவர்கள் தானே...!
சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள் போன்றவை மக்களின் பிரச்சினைகளை விவாதித்து முடிவெடுக்க, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை வகுக்க, திட்டங்கள் தீட்ட... என்பதே பெரும்பாலான உறுப்பினர்களுக்கு மறந்து விடுகிறது போலும்...!
சட்டமன்றங்கள் செயல்பட்டால் அது தலைமையின் புகழ்பாடும் ஜால்ரா சபையாகவும் அல்லது சட்டையைக் கிழித்துக்கொண்டு மேஜை, நாற்காலிகளை வீசும் சண்டை சபையாகவும், இல்லையெனில் உல்லாசம் அனுபவிக்க வந்த இடமாகக் கருதும் உல்லாசபுரியாகவும் மாறி நிற்பது காலத்தின் கோலம்.
பலகோடி ரூபாய் செலவில் சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள் நடத்தப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கில் வருமானவரி விலக்கில் வழங்கப்படும் சம்பளம், வீடு, கார், பெட்ரோல், தொலைபேசி மற்றும் பல எண்ணற்ற சலுகைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பெறுகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கென்று சில நடத்தைவிதிகள் ஏன் அமல்படுத்தக் கூடாது?
கல்வி சாலைக்கு நுழையும் இளம் மாணவர்களுக்கு கூட சில கட்டுப்பாடுகள் உள்ளன. செல்போன் அனுமதியில்லை. காப்பி அடித்து மாட்டினால் ஐந்து வருடம் பரிட்சை எழுதத் தடை போன்றவை! அப்படியிருக்க, மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கோடியாக கொட்டிக் கொடுத்து மக்கள் சேவையாற்ற அனுப்பப்படும் மாண்புமிகுக்களுக்கும், சட்டசபைக்கும் கட்டுப்பாடே கிடையாதென்றால் சந்தி சிரிக்காதா?
இனியாவது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கறாரான நடத்தைவிதிகள் வகுக்கப்பட வேண்டும். அதை அவர்கள் மீறும் போது அவர்களை திரும்ப பெறும் அதிகாரம் அண்ணாஹசாரே குழுவினர் கூறியது போல் மக்களுக்கு வேண்டும்!
  
21.3.2012

No comments: