Thursday, May 2, 2013

இலங்கை தமிழருக்கான போராட்டங்கள்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

இலங்கை பிரச்சினை தமிழகத்தில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டுள்ளது. தி.முக திலைவர் டெசோ அமைப்பை உருவாக்கி மாநாடு நடத்தினார். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேரடியாகச்சென்று புகார் கொடுத்தனர்.
இதன்பிறகு டெல்லியில் ஒரு டெசோ மாநாடு நடத்தியதுடன் தமிழகத்தில் பந்த்தும் தி.மு.கவால் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வைகோவும், பழ.நெடுமாறனும் இலங்கை தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி கைதாயினர்.

சீமான் இலங்கை பிரச்சினையில் சீறிக் கொண்டிருப்பது புதிதல்ல. அவரது இயக்க இளைஞர் ஒருவர் கடலூரில் தீக்குளித்து இறந்தார். தமிழகத்தில் இலங்கை பிரச்சனையில் தி.மு.க மற்றும் தி.மு.க ஆதரவு கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.கவை விமர்சிக்கும் கட்சிகள் மற்றொரு அணியாகவும் இப்பிரச்சினையில் குரல் கொடுக்கின்றனர்.
தி.மு.கவின் டெசோ செயல்பாடுகள் வேகம் பெறத் தொடங்கியவுடன் தி.மு.கவுக்கு எதிரான விமர்சனங்களும், போட்டி போராட்டங்களுமாக எதிர் அணியினர் இறங்கிவிட்டதை பார்க்க முடிகிறது.
இதில் இலங்கை பிரச்சினைக்காக தற்போது மாணவர்கள் தீவிரமாக போராடத் தொடங்கியுள்ளனர்.
லயோலா கல்லூரி மாணவர்கள் 3நாட்கள் உண்ணாவிரத மிருந்ததில் கைதாகி மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

இதையடுத்து சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் செய்துள்ளனர். மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தி உள்ளனர். சிதம்பரம் பல்கலைக் கழக மாணவர்கள் ரயில் மறியல் செய்துள்ளனர். சக மனிதர்கள் பாதிக்கப்படும் போது இவ்வாறாக எழும் மனித நேய போராட்டங்கள் மிகவும் மரியாதைக்குரியவை. அதுவும் தங்களைத் தாங்களே வருத்தி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிகழ்வு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை பிரச்சினையை தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு, அரசியல் லாபகங்களுக்கு கையாளுகிறார்கள் என்பதாலேயே அது பெற வேண்டிய முக்கியத்துவத்தை மக்களிடம் இழந்துவிட்டது.

இலங்கை பிரச்சினையில் அனைவரது உணர்வும் அங்குள்ள தமிழர்கள் சுதந்திரத்துடனும், ஜனநாயக மாண்புகளுடனும் வாழ அனுமதிக்கப்படவேண்டும் என்பதே!

இதற்கு அந்நாட்டின் தற்போதைய அதிபர் ராஜபட்சே அரசு எதிராகச் செயல்படுவது சர்வதேச ரீதியில் உறுதியாகியுள்ளது. அவரது பாசி நடவடிக்கைகள் அனுமதியை விரும்பும் சிங்களமக்களாலேயே எதிர்க்கப் படுகிறது. சிங்கள இன பத்திரிக்கையாளர்கள் பலரே இதை எதிர்த்ததால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தநாட்டின் விவகாரத்தில் ஒரு அளவுக்குமேல் அழுத்தம் கொடுக்க முடியாது என்பது நம் இந்திய அரசின் நிலைபாடு. எனவே இலங்கையில் நிகழவிருக்கும் ஆட்சிமாற்றமே அங்கு இணக்கமான சூழல் ஏற்பட உதவும். அதற்குள் அந்நாட்டையே எதிரிநாடாக்கி கொள்ளாமல் இலங்கை பிரச்சினையை இந்திய அரசு நீக்குபோக்குடன் கையாள்கிறது.

சர்வதேச ரீதியில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் இலங்கையை நிச்சயம் தனிமைப்படுத்தும்.
இது தொடர்பாக செப்டம்பர் 2013ல் இடைக்கால அறிக்கை ஒன்றும் 2014 ஆரம்பத்தில் இறுதி அறிக்கை ஒன்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் வெளியாகும் போது இலங்கை அரசு மேலும் அம்பலப்பட்டுவிடும்.

அதுவரை பொறுத்திருந்து - சர்வதேசரீதியில் லாபி செய்து ராஜதந்திரத்துடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் இலங்கை அகதிகளிடமும் புலம் பெயர்ந்துள்ள சுமார் 7லட்சம் இலங்கை தமிழர்களிடமும் இல்லாத கொந்தளிப்பு தீக்குளித்தலும், மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் போராட்டங்களும் தவிர்க்கப்படவேண்டும். 
தீக்குளிப்பதாலோ, பொதுவேலைநிறுத்ததாலோ, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தாலோ பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது வெறும் கனவாகும். உலகநாடுகளின் ஒததுழைப்போடு இலங்கை அரசின் மீது அழுத்தம் கொண்டு வருவதே நிரந்தர தீர்வாகும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
11-3-2013

No comments: