Friday, May 24, 2013

இலங்கைப் பிரச்சினையும், இந்திய அரசின் நிலைப்பாடும்!




மனித இதயங்களை நடுநடுங்க வைக்கும் கொடூர தாக்குதல்கள்... பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட அவலங்கள்... தப்பிப்பிழைத்த பல்லாயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்ட படுகாயங்கள், உடல் ஊனங்கள்...
இலங்கைபோரில் நடந்த மனித உரிமை மீறல்களை இதுவரைத் தமிழகத் தலைவர்கள் பேசிவந்த நிலை மாறி தற்போது .நா.மனித உரிமை ஆணையமே அம்பலப்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி, தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் .நா.சபை மனித உரிமைகள் குழு கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை கண்டிக்கும் வகையிலும், இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கும் வகையிலும் தீர்மானம் கொண்டுவர உள்ளன.
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என தமிழக தலைவர்கள், ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், பொன்.ராதாகிருஷ்ணன், பழ.நெடுமாறன்... உள்ளிட்டோர் இந்திய அரசுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர்.
ஆனால் இந்த நிர்பந்தத்திற்கு இந்திய அரசு இசைவான பதிலை இதுவரை தரவில்லை!
இலங்கைக்கு எதிரான இத் தீர்மானம் சர்வதேச அரசியலை உள்ளடக்கியதாகும்!
இந்து மகா சமுத்திரத்தில் இலங்கையின் இருப்பிடம் என்பது ராணுவ ரீதியாக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் தற்போது சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் நடக்கும் போட்டா போட்டியில் சீனாவின் செல்லப் பிள்ளையாகி விட்டது ஸ்ரீலங்கா! சீனாவின் மீதான சீற்றமும், தன் அதிகாரத்தை இலங்கையில் நிலை நாட்ட முடியாத ஆதங்கமும் தான் அமெரிக்காவை இலங்கை அரசின் ராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக ரௌத்திரம் கொள்ளவைத்துள்ளது. அதே சமயம் தண்டிக்கப்பட்டவேண்டிய அளவுக்கு இலங்கை அரசும் பல தப்புகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. இதை இந்திய அரசு நன்கு புரிந்து வைத்துள்ளது.
ஏனெனில் சர்வதேச அரங்கில் அமெரிக்கா நடத்திஉள்ள மனித உரிமை மீறல்கள் கொஞ்சமா, நஞ்சமா... எனினும் அமெரிக்காவின் முயற்சியை நாம் அலட்சியப்படுத்த முடியாது. இதே போல், இலங்கை பிரச்சினையை இந்திய அரசு இந்தியநலன்கள் சார்ந்தே பார்க்கிறது.
இலங்கையில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் பல பிரம்மாண்ட முதலீடுகளைச் செய்துள்ளன. அதோடு இந்தியாவிற்கு எதிராக சீனாவோடு இலங்கை கை கோர்த்துவிடாத வகையில் அதை இணக்கமாகவே கையாள விரும்புகிறது இந்தியா.
மேலும், போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசின் சார்பில் கட்டித்தரப்படும் வீடுகள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள், நிவாரணஉதவிகள் தடங்கலின்றி தொடரவும் இந்தியா இலங்கை அரசுகளுக்கிடையிலான இணக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது... என்பது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கருத்தாக உள்ளது.
ஆக மொத்தத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரையில் தாங்க முடியாத சோகம். ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய அரசு தமிழக அரசியல் தலைவர்களின் குரலுக்கு மதிப்பளிக்குமா? என்பது கேள்விக்குறியே!
வரும் மார்ச் 21ந் தேதி ஜெனிவாவில் .நா மனித உரிமைகள் குழு கூட்டத்தில்! அமெரிக்காவின் கை ஓங்கினால், அதன் உறுப்புநாடுகள் ஆதரவும் கிடைத்துவிட்டால் இலங்கை அரசு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கண்டிக்கப்பட வாய்ப்புண்டு. இதை பொறுத்திருந்து பார்க்க மட்டுமே நமக்கு வாய்ப்புள்ளது. பொறுத்திருப்போம்!
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதே இயற்கை நியதி. இதை இலங்கை அரசு உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
8.3.2012

No comments: