Wednesday, May 22, 2013

மியான்மரில் மீட்டெடுக்கப்பட்ட ஜனநாயகம்!




பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் ஜனநாயகத் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது.
நீண்ட காலம் அங்கே கோலோச்சிய ராணுவ ஆட்சிக்கு ஜனநாயக வழிமுறைகளின் மூலம் மக்கள் விடை கொடுக்கும் விந்தைகளை உலகம் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதுவரையிலான கொடுங்கோன்மை ராணுவ ஆட்சிகளெல்லாம் ரத்தக்களரியில்தான் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் மியான்மரிலோ அது அஹிம்சை வழிமுறையில் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அதிசயத்தை அரங்கேற்றிக் கொண்டிருப்பவர் டாவ் சூ என்று பர்மிய மக்களால் அன்பொழுக அழைக்கப்படும் ஆங்சான் சூகி. இவர் அஹிம்சையின் அம்சமாக அகில உலகத்தாலும் ஆராதிக்கப்படுகிறார்.
பர்மிய மக்களின் தந்தையாக அறியப்பட்ட ஆங்சான் என்ற சூகியின் தந்தை சதிகாரர்களால் சமாதிக்கு அனுப்பப்பட்டார். தாயோ நாடு கடத்தப்பட்டார். சகோதரிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் நாடுவிட்டே ஓடிப்போனார். ஆயினும் ஆங்சான் சூகி ஆக்ரோஷப்படவுமில்லை, அயர்ந்தும் போகவில்லை. அயல்நாடுகளில் உயர்கல்வி கற்று .நாவில் உத்தியோகமும் பார்த்து தாயகம் திரும்பிய சூகியை மக்கள் தாயாக பாவித்தனர். தலைமை ஏற்க அழைத்தனர்.
1990ல் நடந்த தேர்தல் தீர்ப்பில் சூகியை தூக்கிவைத்தனர் அரியணையில்! ஆனால் ராணுவ ஆட்சியாளர்களோ அவரை தூக்கி வீசினர் சிறையில்!
அகில உலகமே இந்த ஜனநாயகப் படுகொலை கண்டு அதிர்ந்தது, கண்டித்தது! ஆயினும் இராணுவ ஆட்சியாளர்கள் அசரவில்லை.
ஆங்சான் சூகி சிறைச்சாலையையே தவச்சாலையாக்கிக் கொண்டார். அவர் எண்ணங்கள் எழுத்தோவியங்களாக உலகை வசீகரித்தது. குறிப்பாக அவரது, அச்சத்திலிருந்து விடுதலை (திக்ஷீமீமீபீஷீனீ யீக்ஷீஷீனீ யீமீமீக்ஷீ) என்ற உரைவீச்சும், அதன் எழுத்துவடிவமும் இந்த அகிலத்தையே ஆகர்ஸித்தது. அஹிம்சையின் பிரதிபலனாக கிடைத்த அந்த ஆன்மபலத்திற்கு அண்ணல் காந்தியே காரணமென்றார் சூகி!
அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங், தென்ஆப்பிரிக்காவில் நெல்சன்மண்டேலா என்று உலகின் பற்பலபகுதிகளிலும் உருவான அஹிம்சை ஆளுமைகளின் - அண்ணல் காந்தியை ஆதர்ஷபுருஷராக கருதி வெற்றியை வென்றெடுத்தவர்களின் பட்டியலில் - தற்போது ஆங்சான் சூகி அழிக்கமுடியாத முக்கியத்துவத்தை பெற்றுவிட்டார்.
24 ஆண்டுகள் இடைவிடாத போராட்டம்! 15 ஆண்டுகள் சிறைவாசம்..,! அவ்வப்போது சூகியை விடுவித்து, கொலைவெறி தாக்குதலை நடத்தி அவர் கதையை முடிக்க துடித்தது இராணுவ ஆட்சி. காதலித்து கைபிடித்த கணவரை இழக்க நேர்ந்தது. பெற்றெடுத்த பிள்ளைகளை பிரியநேர்ந்தது. எத்தனை இன்னல்கள் அடுத்தடுத்து வந்த போதிலும் ஆங்சான் சூகி அஹிம்சை வழி போராட்ட வழிமுறைகளிலிருந்து அணுவளவும் பிரளவில்லை. இந்த அபூர்வ ஆளுமையே அவருக்கு நோபல்பரிசு உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றின் உன்னத விருதுகள் தேடிவரக் காரணமாயிற்று! நடைபெற்றது இடைத்தேர்தல்தான்! இதன் மூலம் மக்கள் ராணுவத்திற்கு விடைகொடுக்கும் விருப்பம் வெளிப்பட்டுள்ளது. விரைவில் ஒரு அஹிம்சை, அரியணை காணவிருக்கிறது.


2.4.2012

No comments: