Thursday, May 2, 2013

மாநில உரிமைகள் பறிபோகிறதா?




                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு மெல்ல, மெல்ல விழுங்கிய வண்ணமிருக்கிறது.

தற்போது அதற்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 7வது பிரிவில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் படி மாநில அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து இனி மத்திய அரசு சேவை வரியை விதிக்குமாம்!

அது மட்டுமின்றி மாநில அரசின் பொதுத்துறை நிறுவனகணக்கு வழக்குகள் மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.

"இது இந்திய அரசியல் சட்டத்தின் 289வது பிரிவின்படி மாநில அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை தட்டி பறிக்கும் முயற்சி. மாநில அரசு வருமானத்தின் மீதான மறைமுகமான வரிவிதிப்பை அரசியல் சட்டமே அனுமதிக்கவில்லை...." என்பது தமிழக முதல்வரின் வாதமாகும்.

நமது முதல்வரின் எதிர்ப்பு முற்றிலும் நியாயமானது. இப்படி ஒரு நிலைபாட்டை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்து மாநில அரசுகளின் மீது திணிக்க வேண்டியதில்லை.

மாநில அரசுகளே நிதிப்பற்றாக்குறையால் கண்விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு வழிப்பறி கொள்ளையனைப்போல் இருக்கும் நிதியையும் பறிப்பது எந்த விதத்தில் நியாயம்?

இது அமல்படுத்தப்பட்டால் டாஸ்மாக் வருமானத்தில் சில நூறு கோடிகளை மத்திய அரசு சேவை வரியாக வசூலித்துவிடும். இதை தாக்குபிடிக்க முடிந்தாலும் லாபமில்லாமல் செயல்படும் சர்க்கரை ஆலைகள், கோ.ஆப்.டெக்ஸ் போன்றவை என்ன ஆகும்?

ஏற்கெனவே மத்திய அரசு மாநிலங்களுக்கு தரும் வரிவருவாயின் பங்கு படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று பெரும் பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது.

1990வரையிலும் மத்திய வரிவருவாயிலிருந்து 32.5% மாநில அரசுகளுக்குத் தரப்பட்டது. 2004ல் இதில் 3% குறைக்கப்பட்டது. இது மேலும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது மத்திய வரிவருவாயிலிருந்து மாநில அரசுகள் பெறுவதோ 19% தானு! அதாவது தமிழகம் மத்திய அரசுக்கு பல்வேறு வரிவிதிப்புகளின் மூலம் தரும் மொத்தப்பணம் 79,631கோடி! ஆனால் இதில் ஐந்தில் ஒரு பங்கைத் தான் தமிழக அரசுக்கு மத்திய அரசு தருகிறது.

இந்நிலையில் மேன்மேலும் மாநில அரசை பலவீனப்படுத்தமுயற்சிப்பது நல்லதல்ல.

1970களுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத அரசுகள் மாநிலங்களில் பொறுப்புக்கு வந்ததில் இருந்து மத்திய அரசு மாநில அரசுகளக்கு வரி வருவாயை குறைக்கத் தொடங்கியது. மக்களின் வரிப்பணத்தை மாநில அரசுகள் இலவசத்திட்டங்களுக்கு வாரி இறைத்து வாக்குவங்கி அரசியலை செய்யத் தொடங்கியதின் எதிர்வினையாகவும் மத்திய அரசு மாநில அரசுக்கான வரிவருவாயைக் குறைத்து, தானே மக்களுக்கு நேரடியாக தரமுனைந்தது.

அதேபோல் ஆண்டுக்காண்டு மத்திய அரசு தன் அதிகாரத்தை அதிகப்படுத்திய வண்ணமுள்ளது. தற்போதைய நிலையில் மத்திய அரசிடம் 98வித அதிகாரங்களும், மாநில அரசிடம் 62வித அதிகாரங்களும் இரு அரசுகளுக்கும் பொதுவான அதிகாரங்களாக 52ம் உள்ளது. இந்த பொது அதிகாரங்கள் மெது,மெதுவாக மத்திய அரசு வசம் போய் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

மாநில ஒருங்கிணைப்பு கவுன்சில்
தேசிய வளர்ச்சி கவுன்சில்
இவையாவும் வெறும் சடங்குகளாக கூட்டப்பட்டு கலைகின்றனவே யன்றி மாநில அரசுகள் இவற்றில் தங்கள் மனக்குறைகளைக் கூட வெளிப்படுத்தவழியில்லை.

கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசே வேட்டு வைக்கலாகாது.
அதிகார குவியல் எப்போதும் ஆபத்தாகவே முடிந்துள்ளன.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
20-3-2013


No comments: