Wednesday, May 22, 2013

தெலுங்கானா தேவைதானா?




நாள்தோறும் போராட்டங்கள்... கிளர்ச்சிகள்... உண்ணாவிரதம், பந்த், பேரணி, கலவரம், தற்கொலைகள், வன்முறைகள், போலீஸ் துப்பாக்கி சூடு... என ரணகளப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆந்திராவின் தெலுங்கானா பகுதி!
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதிமக்களின் அணையாத பெருவிருப்பமாக இருக்கிறது.
ஒரே மொழிபேசுகின்ற பிரதேசத்தில் இரு மாநிலங்கள் தேவைதானா?
தனித்தெலுங்கானா கோரிக்கை நியாயமானதுதானா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவுக்கு வருமுன் சில யதார்த்தங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தெலுங்கானா பகுதி மூன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள ஒரு பிரதேசம். ஆந்திராவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 42% தெலுங்கானாவிற்குள் வருகிறது.
தெலுங்கானா பகுதியின் எல்லைகளில் மகாராஷ்டிரம், பீகார், கர்நாடகா போன்றவை வருகின்றன. பன்னெடுங்காலமாக ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளையும், ராயலசீமா உள்ளிட்ட கடற்கரை பிரதேசங்களையும் வெவ்வேறு மன்னர்களே ஆட்சி செய்தனர். வெகுசில சந்தர்ப்பங்களிலேயே இருபிரதேசங்களும் ஒரே ஆட்சியின் கீழ் வந்துள்ளன. ஆங்கிலேயே ஆட்சிக்கு முன் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டுவரை இஸ்லாமிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டே தெலுங்கானா பகுதி இருந்தது. ஆந்திராவின் தெலுங்கானா பகுதி நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் பிரிட்டிஷாருக்கு கப்பம் கட்டிய காலத்தில் மற்ற பகுதிகளோ மெட்ராஸ் பிரசிடென்சியோடு இணைந்திருந்தன.
புவியியல், தட்பவெப்பநிலை வகையிலும் தெலுங்கானா ஆந்திரப்பகுதிகளில் இருந்து வேறுபட்டது. வறட்சி, கடும் வெப்பம் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும் நிலமாக தெலுங்கானா உள்ளது.
இருபகுதிகளுக்குமே பொதுவான தாய்மொழி தெலுங்கு என்றாலும் தெலுங்கானா மக்களின் தெலுங்கு மற்ற பகுதிகளிலிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டது. தெலுங்கானா பகுதியின் இலக்கிய மரபும், படைப்பிலக்கியங்களும், பேச்சு வழக்கும், கலாச்சார விழுமியங்களும், கொண்டாடப்படும் விழாக்களும், மற்ற ஆந்திரப் பகுதிகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்ல, தனித்தன்மை கொண்டவையுமாகும்!
இந்தியாவிற்கு ஆகஸ்ட் 1947 ல் சுதந்திரம் கிடைத்தபோது ஆந்திராவின் பிறபகுதிகள் உடனடியாக சுதந்திர இந்திய அரசின் கீழ்வந்தன, ஆனால் தெலுங்கானாபகுதி 5 ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய அரசின் ஆட்சிக்குள் வந்தது. இதில் முதல் ஓராண்டு நிஜாம் மன்னரின் கீழும், அடுத்த நான்காண்டுகள் தெலுங்கானா போராட்டம் செய்து கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய கம்யூனிஸ்டுகளின் பிடியிலும் இருந்தது. 1951ல் இந்தியராணுவத்தின் பலப்பிரயோகத்திற்கு பிறகே இந்திய ஆட்சியின் கீழ் வந்தது. அதன் பிறகும் ஐந்தாண்டுகள் தெலுங்கானா தனித்தே இருந்தது.
1956ல் ஆந்திரா தனி மாநிலமாக உருவானபோது சென்னையை தலைநகரமாக்கும் அவர்களது முயற்சி தோற்றது. அது வரை கர்நூலைத் தலைநகரமாகக்கொண்டே ஆந்திரா செயல்பட்டது. அது மிகச்சிறிய நகரம் என்பதால் தெலுங்கானாவின் ஹைதராபாத் ஆந்திராவுக்கு தேவைப்பட்டது. ஆனால் தெலுங்கானா மக்கள் ஆந்திராவோடு இணையவிரும்பவில்லை. ஆயினும் ஆந்திராவின் செல்வாக்கான அரசியல் தலைவர்கள் மத்திய அரசுக்கு தந்த நிர்பந்தத்தால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம் என்ற நிபந்தனையோடு நேரு அரசாங்கம் தெலுங்கானாவை ஆந்திராவோடு இணைத்தது.
ஆனால் 1968ல் தொடங்கி சுமார் 45 ஆண்டுகளாக தெலுங்கானா தனி மாநில போராட்டம் அவ்வப்போது வீறுகொண்டு எழுவதும், அடங்குவதுமாகவே இருந்து கொண்டிருக்கிறது. தற்போது சமீபத்திய மூன்றாண்டுகளில் இதன் வீச்சு பெரும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
காரணம் என்ன?
அரசு வேலைவாய்ப்புகள், பொருளாதார நலன்கள், அரசின் நலத்திட்டங்கள்... என அனைத்திலும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தெலுங்கானா மக்கள் கருதுகிறார்கள். 42% மக்கள் தொகை கொண்ட தெலுங்கானா பகுதியினர் 20 சதவிகித அரசு ஊழியர் வாய்ப்பும், 10% உயர் அதிகாரவாய்ப்புமே பெறமுடிகிறது. கிருஷ்ணா, கோதாவரி, முஷி போன்ற ஆறுகள் தங்கள் பகுதியில் இருந்தாலும் அதன் பலன்கள் ஆந்திர பகுதிக்கு 82% மும் தங்கள் பகுதிக்கு 18% முமாக இருக்கிறது. எல்லாவகையிலும் தெலுங்கானா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மிகவும் பின்தங்கியுள்ளது என்கிறார்கள் தெலுங்கானா மக்கள்.
தனி தெலுங்கானா உருவாவதற்கு என்ன தடைகள்?
ஹைதராபாத் தெலுங்கானா வசம் போய்விடும் என்பதே பிரதான காரணம். ஹைதராபாத்தில் ராயல்சீமா மற்றும் கடற்கரை பகுதி ஆந்திரமக்கள் பெரும் முதலீட்டில் பற்பல தொழில் நிறுவனங்களை நடத்திவருகின்றனர். இப்பகுதி தொழிலதிபர்கள் செல்வாக்கான அரசியல்வாதிகள், உயர்பதவி வகிப்போர் தரும் நிர்பந்தங்களே மத்திய அரசு டிசம்பர் 2009லேயே தனி தெலுங்கானா என அறிவித்தும் இன்றுவரை செயல்படுத்த முடியாமல் இருப்பதாகும். ஆனால் தெலுங்கானாவை வலியுறுத்தி இப்பகுதியின் 100 எம்.எல்.ஏக்களும் 13 எம்.பிக்களும், 12 அமைச்சர்களும் ராஜீனாமா செய்து போராடி வருகின்றனர். தனித் தெலுங்கானாவிற்கு ஆதரவாக உருவான கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி. இக்கட்சிக்கு இப்பகுதி மக்களிடம் கணிசமான செல்வாக்குண்டு. தெலுங்கானா பகுதியில் போட்டியிடும்போது அது தேசிய கட்சிகளான பா.., காங்கிரஸானாலும் சரி, மாநில கட்சிகளான தெலுங்குதேசம், பிரஜாதேசமானாலும் சரி தனித்தெலுங்கானாவை ஆதரித்துப்பேசி ஓட்டு பெறுகின்றன. ஆனால் இக்கட்சிகள் தீர்வு எட்டுவதற்கான முயற்சி என்று வரும்போது மாறுபட்ட வேறுநிலை எடுக்கின்றன. அரசியல் கட்சிகளின் இந்த இரட்டைவேட அணுகுமுறையே இப்பிரச்சினை இடியாப்ப சிக்கலானதற்கு காரணமாகும்!

சரியான தீர்வு என்ன?
1960 களுக்குப் பிறகு பாம்பே மகாணம் மகாராஷ்டிரா, குஜராத்  என பிரிக்கப்பட்டது. இதே போல் பஞ்சாபிலிருந்து ஹரியானா, இமாச்சல பிரதேசமும், மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கரும், .பி.யிலிருந்து உத்திரகாண்டும், பீகாரிலிருந்து ஜார்கண்டும் தனிமாநிலமாக உருவாகி இருக்கும் போது விசால ஆந்திராவிலிருந்து தெலுங்கானா விலகி தனி மாநிலம் காண்பதில் தவறுகாண ஒன்றுமில்லை. தெலுங்கானா போராட்டத்தின் விளைவால் கடந்த சில ஆண்டுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி பல இலட்சம் கோடிகள் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
1953ல் அமைக்கப்பட்ட மாநில பிரிவினைகளுக்கான ஷி.ஸி.சி என்ற கமிஷன் அன்றே, தனித்தெலுங்கானா உருவாக்கவேண்டும்  என்றே பரிந்துரைத்தது, பிறகு கிருஷ்ணா கமிட்டியும் அதை வழி மொழிந்தது. எனவே இரு தரப்பும் இணக்கமாக பேசி, விட்டுக்கொடுத்து விரைவில் தீர்வுக்கு வரவேண்டும்.
30.3.2012

No comments: