Friday, May 24, 2013

வாரிசு அரசியல்




எதிர்பார்த்தபடியே பல எதிர்ப்புகளை சமாளித்து தன் மகன் அகிலேஷ்யாதவை முதலமைச்சராக்கிவிட்டார் முலாயம் சிங் யாதவ். கடந்த 12 ஆண்டுகளாகவே இதற்கான காய்நகர்த்தலை அவர் கச்சிதமாகச் செய்தார் என்பது உத்திரபிரதேச அரசியலை உன்னிப்பாக கவனித்து வந்தவர்கள் அறிந்தது தான்!
முலாயம்சிங்கின் வாரிசு அரசியலை முதன்முதல் எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய தலைவர் ரஷீத் மசூத் தான்! அதன் பின் அமர்சிங் தொடங்கி பலர் எதிர்த்தபோதிலும் அசரவில்லை முலாயம்சிங்-
குடும்ப உறுப்பினர்களின் கோபக்கனலை குளிர்வித்து, மூத்த தலைவர்களின் எதிர்ப்புகளை முறியடித்து.., அமைச்சராகக் கூட அனுபவம் பெற்றிராத, மாநில அரசு நிர்வாகத்திற்கு முற்றிலும் புதியவரான அகிலேஷ் யாதவை தன் மகன் என்பதற்காக முதலமைச்சராக்கி விட்டார் முலாயம் சிங்.
கடைசிவரை எதிர்த்து வந்த அசம்கானையும் தற்போது பேரம்பேசி பணிய வைத்துவிட்டார் முலாயம்சிங். இதற்காக அதிகமான இஸ்லாமியர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக்கியதோடு இவர்களில் கணிசமானோருக்கு அமைச்சர் பதவியும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க இங்கங்கெனதாபடி எங்கெங்குமாக விரவிப் பரந்து வியாபித்து வரும் வாரிசு அரசியல் மனோபாவம் .பி.யை மட்டும் விட்டுவைத்துவிடுமா என்ன?
சுதந்திர இந்தியாவில், ஜனநாயக அடித்தளத்தில் முதன்முதல் நேரு குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வாரிசு அரசியல் தற்போது காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பிரதமர் பதவி தொடங்கி வார்டு கவுன்சிலர் பதவி வரை வாரிசுரிமையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!
காஷ்மீரில் அது ஷேக்அப்துல்லாவில் ஆரம்பித்து பாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா என்று முதலமைச்சர் பதவி என்பது ஒரே குடும்பத்தின் முன்னுரிமையாக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் பிரகாஷ்சிங் பாதல் ஏற்கெனவே தன் மகன் சுக்பீர்சிங்யாதவை துணை முதலமைச்சராக்கிவிட்டார்.
அசாமில் ஹிதேஸ்வர் சைக்கியா தன் மகன் தேவவிரத சைக்கியாவை முதலமைச்சராக்க துடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படி வாரிசுகளை அதிகார மையத்தில் அமர்த்த துடித்த, துடிக்கின்ற அரசியல்வாதிகளின் பட்டியல் மிக மிக நீளமானது..!
ஜி.கே.மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன், .சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம்,
ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், எஸ்.பி.சவானின் மகன் அசோக்சவான், கருணாகரனின் மகன் முரளிதரன், ஜிதேந்திரபிரசாத் மகன் நிதின் பிரசாத், பி..சங்கமாவின் மகள் அகதாசங்மா... இப்படி பெரிய பட்டியலே உள்ளது.
இன்றைய பாராளுமன்ற காங்கிரஸின் இளம் உறுப்பினர்களில் 80க்கும் மேற்பட்டோர் வாரிசு வழிமுறையில் வந்தவர்களே! பெண்கள் பிரதிநிதித்துவத்திலும் வாரிசு அரசியலே! மக்களை சபாநாயகர் மீராகுமார் தொடங்கி 18 பெண்கள் இதில் அடக்கம்.
காங்கிரஸ் மட்டுமல்ல, பா..கவும் இதில் தற்போது தடம்பதிக்கத் தொடங்கிவிட்டது ராஜஸ்தானில் வசுந்த்ராஜேவின் வாரிசு துஷயந்த்சிங் இதற்கு உதாரணம்!
கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே இதில் விதிவிலக்கு! திறமையும், ஆர்வமும் உள்ள அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவது, பஞ்சமா பாதகமா எனக் கேட்கலாம். பாதகமில்லை. ஆனால் அவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு பதவி பெறுவதும், மற்ற திறமையாளர்கள், உழைப்பாளிகள் உதாசீனப்படுத்தப்படுவதும் ஜனநாயக அரசியலுக்கு இழுக்காகும்!
தமிழகத்தில் கருணாநிதி அவர்களின் வாரிசு அரசியல், கட்டுக்கோப்பான கட்சியை கலகலக்க வைத்ததும், ராமதாசின் வாரிசு அரசியல் கட்சிக்குள் ரகளையை உருவாக்கியதும், ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் வாரிசு அரசியல் ஜெகன்மோகன் ரெட்டி வடிவில் காங்கிரஸ் இயக்கத்தை பிளவுபடுத்தியிருப்பதும் வாரிசு அரசியல் என்ற வக்கிரத்தின் உதாரணங்களாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மன்னராட்சியில் ஊறித்திளைத்த நமது இந்திய சமூகம் இன்னும் ஜனநாயக காற்றை சுவாசிக்கும் பக்குவத்தை எட்டவில்லை போலும்! திணிக்கப்படும் இந்த வாரிசு அரசியலிலேயே திருப்திபட்டுக்கொள்ளும் மனநிலைக்கு மக்களும் தள்ளப்பட்டு விட்டார்களோ என்னவோ! ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்களின் வாரிசு அல்லாதவர்கள் அல்லது ஜாதி, மத, பொருளாதார பின்புலமற்றவர்கள் ஆற்றல், திறமைகள் அளப்பரிய பெற்றிருந்தாலும் அரசியல் ரீதியாக மக்கள் தொண்டாற்ற முடியாது என்பது எவ்வளவு பெரிய அவலம்..!
இந்தியா மட்டுமில்லை இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தோனேசியா பர்மா... என கீழைதேசத்திலெல்லாம் இது தான் நிலைமை!
ஆனால் அருவெறுக்கத்தக்க இந்த வாரிசு அரசியல் இன்று அரபு நாடுகளில் கூட தூக்கியெறியப்பட்டு வருகிறது மக்கள் புரட்சியால்!
காந்தி, காமராஜ், ராஜாஜி, மொரார்ஜிதேசாய் போன்ற குடும்பத்தை புறக்கணித்த புனித தலைவர்கள்  பிறந்த பாரதமண்ணில் அந்த  ரீதியிலான பாரம்பரியத்தை புதுப்பிப்பது இன்றைய ஜனநாயக சக்திகளின் கடமையாகும்!
நேரு குடும்பத்தால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த நீச அரசியல் நிலை இன்று, நின்று நிலைபெற்று நீட்சியடைவது ஜனநாயகத்திற்கே இழுக்காகும்!
13.3.2012

No comments: