Wednesday, May 22, 2013

இந்தியாவில் ராணுவ புரட்சிக்கான முயற்சி நடந்ததா?




65 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரையில் இல்லாத அதிர்ச்சி ஆட்சிக்கு எதிரான ராணுவப் புரட்சி என்ற கருத்துப்பட தி இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி இரண்டு ராணுவ துருப்புகள் வெவ்வேறு பகுதியிலிருந்து அரசின் கவனத்திற்கு வராமல் டெல்லி நோக்கி அனுப்பப்பட்டதாக அச் செய்தி விவரிக்கிறது. இந்த நிகழ்வானது இந்திய அரசோடு ராணுவத்தளபதி வி.கே.சிங் தன் வயது மற்றும் ஓய்வு பெறுவது குறித்து கருத்துமாறுபட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதின் பின்ணணியில் அணுகபட்டு ஆட்சிக்கு எதிரான இராணுவமுயற்சியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் பாராளுமன்றமே அமளிதுமளிபட்டுள்ளது. இந்த செய்தியை நமது பிரதமர் மன்மோகன்சிங்கும், பாதுகாப்பு அமைச்சர் .கே.அந்தோணியும் திட்டவட்டமாக மறுத்து, இது பீதியை கிளப்பும் நோக்கத்தோடு வெளியான செய்தி எனக் கூறி உள்ளனர். இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங்கும் இச்செய்தியின் உள்நோக்கத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
உலக அரங்கில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள இராணுவ புரட்சி குறித்து பார்ப்போமேயானால் அதில் இராணுவ புரட்சி குறித்த பொதுவான சில அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன;
* மக்கள் மீதான ஆட்சியாளர்களின் சர்வாதிகார அடக்குமுறை...,
* ஜனநாயக முறையில் இந்த ஆட்சியை அகற்றமுடியாது என்ற அவலநிலை...,
* எதிர்கட்சி தலைவருக்கும், ராணுவத் தளபதிக்குமான ரகசிய பேரங்கள்...,
* ஆட்சித் தலைமைக்கும், ராணுவத் தலைமைக்குமான அதிகார போட்டிகள்...,
* இராணுவ புரட்சியை, இராணுவ ஆட்சியை ஆதரிக்கக்கூடிய மக்களின் மனோநிலை...,
இந்தக் காரணிகள் எதுவுமே தற்போது இந்தியாவிற்கு பொருந்தாது என்பதே யதார்த்தம்.
அதுவும் நேர்மைக்கும், தேசபக்திக்கும் அடையாளமாகத் திகழும் இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் இச்செய்தியை கடுமையாக விமர்சித்துள்ளதையும், எதிர்கட்சித் தலைவர்களுமே கூட இத்தகு ராணுவ புரட்சியை இந்தியாவில் விரும்பவில்லை என்பதையும் அவர்களது அறிக்கையின் வாயிலாக நாம் அறியலாம்.
நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய ஓர் அம்சம் என்னவென்றால், நம் பாரததேசம் அஹிம்சைக்கும், சகிப்புத்தன்மைக்கும் அடையாளமாக திகழும் காந்தி தேசம். அடிப்படையில் ஒரு ஆன்மீக பூமி! இங்கே ஆட்சியில், இராணுவத்தில் ஊழல்கள், அலட்சிய போக்குகள், அஜாக்கிரதைகள் இருக்கலாம்... ஆனால் ரத்தக்களரிக்கு இடமளிக்காது! அதற்கு மக்களின் ஆதரவு ஒரு போதும் கிடைக்காது.
இந்தியாவைச் சுற்றிலுள்ள பெரும்பாலான ஆசியநாடுகளில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி ராணுவத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுவருவதை இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ்தான், மியான்மர்... சீனா போன்ற நாடுகளில் நாம் பார்க்கிறோம். ஆனால் இந்தியாவில் அதற்கான சிறிய  அறிகுறி கூட இதுவரை இல்லை. காரணம், இது காந்தியத் தலைமையின் கீழ் முப்பது வருட அகிம்சை யாகத்தில் புடம் போடப்பட்ட தேசம். அந்த அடித்தளம் மிகமிக ஆழமானது.
ஆகவே, இது போன்ற செய்திகள் பரப்பரப்புக்கு உதவலாம். சில அதிர்வலைகளை கூட ஏற்படுத்தலாம். ஆனால் ஆரோக்கியமானதல்ல.
அதே சமயம் இது போன்ற விமர்சனங்களுக்கு ஆளாகக் கூடிய வகையில் ஆட்சியாளர்களுக்கும், இராணுவத்திற்குமான இடைவெளி இடம் கொடுத்துள்ளதையும் நாம் அலட்சியப்படுத்திடாமல் அது மிக விரைவில் சீர் செய்யப்படவேண்டும் எனக் கூற கடமை பட்டுள்ளோம்.
5.4.2012

No comments: