Wednesday, May 22, 2013

தாங்கமுடியாத தங்கத்தின் மீதான வரிவிதிப்புகள்!



தங்கம் என்பது இந்தியமக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகத் திகழ்கிறது. இந்தியாவில் தங்கப் பயன்பாடு என்பது வசதியுள்ளவன், வசதியற்றவன் என்ற எல்லைகளைக் கடந்தது. எந்தக் குடும்பத்திலும், எந்த ஒரு விஷேசமென்றாலும் அதில் தங்க நகையின் பயன்பாடு என்பது ஏதேனும் ஒரு வகையில் தவிர்க்க இயலாமல் இருந்து வருகிறது. அதுவும் எவ்வளவு பரம ஏழையென்றாலும் கல்யாணம் என்று வந்துவிட்டால் கட்டும் தாலியில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் இல்லாமல் நடப்பதில்லை.
தங்கத்தை ஒரு நல்ல முதலீடாகவும், சேமிப்பாகவும் இந்தியர்கள் கருகிறார்கள். இதனால் தான் உலகத்தின் மொத்த தங்க பயன்பாட்டில் இந்தியாவின் பங்களிப்பு 25 சதவிகிதமாக உள்ளது.
இந்திய மக்கள் இல்லங்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தின்  அளவு சுமார் 20,000 டன்கள் என்பது மலைக்கவைக்கும் உண்மையாகும்! இந்தியாவின் அந்நியச்செலவாணி கையிருப்பில் தங்கத்தின் பங்களிப்பு கணிசமானது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தங்கம் கடந்த பத்தாண்டுகளில் வரலாறு காணாத வகையில் 500% சதவீதம் விலையேற்றம் கண்டுள்ளது. ஆனாலும் அதையும் மீறி மக்களின் தங்கத்தின் மீதான ஆர்வம் தணியவில்லை. சென்ற ஆண்டு மட்டுமே சுமார் ஆயிரம் டன் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய அரசுக்கு கிடைத்த வருமானம் 22,000 கோடி என்று ரிசர்வ் வங்கியே அறிவித்தது. இந்த அபார வருமானம் போதாது என்று தற்போது மத்திய அரசு தனது பட்ஜெட்டில் தங்க இறக்குமதி மற்றும் விற்பனைக்கு சகட்டுமேனிக்கு வரி விதித்துள்ளது. புதிதாக உற்பத்தி வரி 1%, இறக்குமதி வரி மேலும் 2%, சுங்கவரி 1%, என்பதோடு இன்னும் பல வரிவிதிப்புகளை அறிவித்தது.
இந்த அறிவிப்பு பெரிய, பெரிய கோடீஸ்வர தங்கவியாபாரிகளைக்கூட போராட்ட கோதாவில் இறக்கிவிட்டது. ஜொலிக்கும் நகைகளை குளிர்பதன ஷோரூம்களில் விற்று, கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கிவந்த இந்த தங்கவியாபாரிகள் இன்று வீதிக்கு வந்து போராடி போலீசின் அடி, உதைக்கு ஆளாவதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்! ஆம் நம் மக்கள் பார்வையாளர்களாகவே இருந்து பழகிவிட்டவர்கள்தானே!
எவ்வளவு விலை ஏறினாலும் எப்படியேனும் மக்கள் தங்கம் வாங்கத்தான் போகிறார்கள். அவர்களும் விற்கத்தான் போகிறார்கள் என்ற உண்மைகள் ஒருபுறமிருக்க, இந்த கூடுதல்வரி விதிப்பால் ஏற்படும் விளைவுகளால் மக்களுக்கே இழப்பு. அரசுக்கும் நன்மை இல்லை! அதுவும் இப்போது கூடுதல் விற்பனைவரி, சேவை வரி என்று தங்க விற்பனையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமானம் கிடைக்காது. மாறாக வரி ஏய்ப்பே நடக்கும்.
எந்த ஒரு பொருளுக்கும் நியாயமான வரியை மீறி வசூலிக்க முனைந்தால் வியாபாரிகளும், மக்களும் குறுக்கு வழியில் சென்று பணம் மிச்சப்படுத்தவே நினைப்பார்கள். பெரும்பாலான மனிதர்களின் இயல்பே இதுதான்!
இனி இந்திய சந்தைகளில் கடத்தல் தங்கம்தான் அதிக அளவில் புழங்கும். மக்கள் எந்த வியாபாரி வரி இல்லாமல் தருகிறாரோ அவரைத் தேடிச் சென்றே வாங்குவார்கள். இதனால் வியாபாரிகள் தங்கத்தை வாங்குவதிலும், விற்பனை செய்வதிலும் உண்மையான கணக்கை அரசுக்கு கொடுப்பார்களா? என்பது கேள்விக்குறிதான்!
ஒவ்வொரு நாளும் தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழித்து தங்க முட்டைகளை அள்ள நினைத்த பேராசைக்காரன் ஏமாந்த கதையாகத்தான் மத்திய அரசின் தங்கத்தின் மீதான தாங்கவொண்ணாத வரியேற்றம் உள்ளது.
அரசு கவனத்தில் கொள்ளவேண்டியது இந்தியாவில் ஏழைகளும், நடுத்தர மக்களுமே அதிகமாக தங்கம் வாங்குகிறார்கள். சொந்த வீடில்லாத, சொந்தமாக இருசக்கர வாகனமில்லாத கோடானுகோடி குடும்பங்களில் கூட குண்டுமணியளவாவது தங்க நகை இல்லாமல் இருக்காது! அதுவும் மொத்த தங்க பர்சேசிங்கில் மூன்றில் இரண்டு பங்கு கிராம மக்களால் நடக்கிறது என்பதே அதிசயத்தக்க உண்மையாயிருக்கிறது. அதுவும் வாயும், வயிறையும் கட்டி சேமித்த பணத்தால் வாங்கப்படுவது! ஏனெனில் ஆண்டுக்கு ஒன்றரைகோடி திருமணங்கள் நடக்கும்  நாட்டில், அதில் 90% ஏழை, எளிய நடுத்தரவர்க்கத் திருமணங்களாகும்!
ஆகவே, வியாபாரிகள் போராடிவிட்டு ஓய்ந்துவிடலாம். ஆனால் எந்த வில்லங்கமும் அறியாத ஏழை, எளியமக்கள், நடுத்தரவர்க்கத்தினர்தான் இந்த விளைவுகளுக்கு விலை கொடுக்க வேண்டியதிருக்கும். மத்திய அரசு மனம் இறங்கினால்தான், இந்த பிரச்சினை தீர்க்க மார்க்கம் பிறக்கும். மனம் இறங்குமா-?

4.4.2012
குறிப்பு : வரியை மத்திய அரசு வாபஸ் பெற்றுவிட்டது.

No comments: